சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அரசியலில் குதிக்கப் போவதாக ரெக்கை கட்டிப் பறக்கும் செய்திகளுக்கு இன்று அவரே முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார்.
டெல்லி ஜந்தர் மந்தர் அருகில் ஊழலுக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வரும் இடத்தில் அவர் பேசியதாவது:
தேர்தலில் எப்பொழுதுமே நான் போட்டியிடப் போவதில்லை. அதேபோல் தனியாக கட்சி தொடங்கப் போவதும் இல்லை. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் முடிவில் நான் உயிர் பிழைத்து இருந்தால் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேர்மையான மனிதர்களை சந்திக்கப் போகிறேன். அப்படி நான் நேர்மையான மனிதர்களை சந்திக்கும் போது அவர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களது பெயரை இணையதளத்தில் வெளியிடுவேன். அவர்களின் பெயர்களை பரிசீலித்து குறிப்பிட்ட சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை தேர்தலில் போட்டியிடச் செய்வேன். அவர்களுக்காகப் பிரச்சாரம் செய்வேன்.
பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. அந்த கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் எந்த ஒரு மாற்றமும் நிகழ்ந்துவிடாது.
நான் உயிரோடு இருக்கும் வரை வலுவான லோக்பால் மசோதாவுக்காகப் போராடுவேன். அனைத்து நேரங்களிலும் உண்ணாவிரதம் இருப்பதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. ஆனால் அரசாங்கத்தின் துரோகத்தால் இந்த முடிவுக்கு நான் தள்ளபப்டுகிறேன் என்றார்.
ஆனால் நேற்று அன்னா ஹசாரே அளித்த பேட்டியில், மக்கள் நான் அரசியலுக்கு வர விரும்பினால் அது பற்றி பரிசீலிப்பேன் என்று கூறியிருந்தார். மேலும் தேவைப்பட்டால் கட்சியைத் தொடங்குவது ஒன்றும் தவறு இல்லை என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment