சென்னை மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் சுபாஸ் சந்திரபோஸ் கூறியதாவது: சென்னையில் கொசுக்கள், ஈக்கள் தொல்லை நாளுக்கு அதிகரித்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநகராட்சி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருந்து தெளிக்கப்படவில்லை. இதனால், காலரா போன்ற நோய் வேகமாக பரவியுள்ளது. உடனடியாக மேயர் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்த வேண்டும்.
சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் பி.வி.தமிழ்செல்வன்: சென்னை கீழ்ப்பாக்கம், தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனைகளில் வயிற்று போக்கு, வாந்தி பேதி, காலராவால் பாதிக்கப்பட்டு மக்கள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வந்துள்ளது. ஆனால், மேயர் சைதை துரைசாமி ஆடி, ஆனி மாதம் வந்தால் இதுபோன்ற பிரச்னை வருவது சகஜம் என்று கூறுகிறார்.
இப்படி அவர் கருத்து கூறுவதை விட்டு மக்கள் அடிப்படை பிரச்னையை தீர்ப்பதில் முழு கவனம் செலுத்த வேண்டும். மாநகராட்சி, குடிநீர் வடிகால்வாரியம், சுகாதாரத்துறை என 3 துறைகளும் இணைந்து மக்கள் பிரச்னையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈக்கள், கொசுக்கள் உள்ள இடங்களில் விரைவாக மருந்து தெளிக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சி 58வது வார்டு கவுன்சிலர் களரிமுத்து கூறியதாவது:
மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையை சுற்றி புகழ் பெற்ற நேரு விளையாட்டு அரங்கம், மைலேடிஸ் பூங்கா, அல்லிகுளம், நேரு மார்க்கெட், கண்ணப்பர் திடல் பகுதி உள்ளிட்ட 125க்கும் அதிகமான முக்கியமான பகுதிகள் உள்ளன. இங்கு கொசு, ஈக்களை ஒழிக்க மாநகராட்சி எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மாநகராட்சி ரிப்பன் மாளிகையை சுற்றியை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மற்ற பகுதிகளில் மாநகராட்சி செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment