இலங்கையுடன் நட்பாக இருக்கவே மத்திய அரசு விரும்புகிறது என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காவிரி நடுவர் மன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இது குறித்து மத்திய அரசு தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. உச்ச நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஒகேனக்கல் தங்களுக்குத் தான் சொந்தம் என்றும், அதை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கர்நாடகம் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் மறு ஆய்வு செய்யத் தேவையும் இல்லை.
டெசோ மாநாட்டை நடத்துவது கருணாநிதியின் விருப்பம். திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தாலும் அதற்கென கொள்கைகள் உள்ளன. அந்த அடிப்படையில் தான் அது மாநாடு நடத்துகிறது. மத்திய அரசு இலங்கையுடன் நட்பாக இருக்கத் தான் விரும்புகிறது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு, சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
ராகுல் காந்திக்கு எந்த பதவியை அளிப்பது என்று பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தான் தீர்மானிப்பார்கள்.
அன்னா ஹசாரே புதிய கட்சி துவங்குவதை வரவேற்கிறேன். ஹசாரே நல்லவர் தான். ஆனால் மகளுக்கு மருத்துவ சீட் வாங்குவதற்காக போலிச் சாதி சான்றிதழ் தயாரித்தவர், ரூ.10 கோடி கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு ஓடியவர்கள் போன்றவர்கள் தான் அவருடன் இருக்கிறார்கள் என்றார்.
No comments:
Post a Comment