லண்டன் ஒலிம்பிக் போட்டியை காண இந்தியாவில் இருந்து ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, யூபி குரூப் தலைவர் விஜய் மல்லையா உட்பட பல பிரபலங்கள் செல்ல உள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டி நாளை முதல் துவங்க உள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இப்போட்டியை காண உலகம் முழுவதும் இருந்து பார்வையாளர்கள், லண்டன் நகருக்கு வந்து குவிந்து வருகின்றனர். இதில் பல உலக பிரபலங்களும் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவில் இருந்து ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி, ஹெச்டிஎப்சி தலைவர் தீபக் பராக், யூபி குரூப் தலைவர் விஜய் மல்லையா, ஜின்டால் ஸ்டீல் மற்றும் பவர் தலைவர் நவீன் ஜின்டால், பஜாஜ் ஆட்டோ தலைவர் ராகுல் பஜாஜ், ஹீரோ மோட்டர்ஸ் நிர்வாக மேலாளர் பவன் முன்சல் மற்றும் டாபர் நிர்வாக மேலாளர் மோஹித் பர்மன் ஆகிய இந்திய பிரபலங்கள், லண்டன் ஒலிம்பிக் போட்டியை காண செல்ல உள்ளதாக அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் லண்டன் ஒலிம்பிக் போட்டியை காண செல்லும் பயணத்தை நவீன் ஜின்டால், ராகுல் பஜாஜ், மோஹித் பர்மன் ஆகியோர் உறுதி செய்துள்ளனர். இந்திய பிரபல நிறுவனங்களின் தலைவர்களுக்காக, லண்டன் வணிக சங்கம் சிறப்பு விருந்துகள் ஏற்பாடு செய்துள்ளதாக, இந்திய தொழிலதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பல இந்திய தொழிலதிபர்கள் சிறப்பு விருந்தினராக லண்டனுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில் சகாரா குழுவின் தலைவர் சுப்ரதா ராய், லண்டன் ஒலிம்பிக் போட்டியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் மூலம் அழைப்பு பெற்றுள்ளார்.
இது குறித்து சகாரா குழுவின் தொலைத் தொடர்பு நிறுவன தலைவர் அபிஜித் சர்கர் கூறியதாவது,
லண்டன் ஒலிம்பிக் போட்டியை காண வரும் இளவரசர் சார்லஸ், லண்டன் மேயர் ஆகியோருடன் சகாரா குழுவின் தலைவர் சுப்ரதா ராயும் கலந்து கொள்வார் என்றார்.
மேலும் லண்டன் ஒலிம்பிக் போட்டியை காண இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் செல்கின்றனர். இதற்காக பயண ஏஜென்ட் நிறுவனங்களான கிங்ஸ், காக்ஸ், மேக்மை டிரிப், தாமஸ் குக் ஆகியவற்றில் அதிக டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தாமஸ் குக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராஜீவ் கேல் கூறியதாவது,
லண்டன் ஒலிம்பிக் செல்ல மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இருந்து அதிகளவில் டிக்கெட்கள் முன்பதிவாகி உள்ளது. லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான பயண திட்டத்திற்கு அதிக வரவேற்பு உள்ளதால், டிக்கெட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment