டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் பின்னணியில் நாசவேலை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய நேற்று வந்த மத்திய ரயில்வே அமைச்சர் முகுல்ராய் கூறுகையில், எனக்கு கோட்ட ரயில்வே மேலாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறிய போது தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிசபதம் ஏற்பட்டது என்றார். இதற்கு மேல் எதுவும் விவரிக்க நான் விரும்பவில்லை. இதற்கு மேலும் கூறுவது என்பது ரயிலில் தீ பிடித்ததற்கான காரணத்தை கண்டறிவதில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
மேலும் நாசவேலை காரணமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இந்த நேரத்தில் எதுவும் சொல்வதற்கில்லை என்றார். அதே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் சிலர் எஸ் 11 பெட்டியில் பயங்கர வெடி சப்தம் கேட்டதாக கூறியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் முகுல்ராய் நேற்று நெல்லூரில் தெரிவித்திருக்கும் கருத்துகள் அனைத்துமே நாசவேலை நடந்திருக்குமோ என்பதையே வெளிப்படுத்துவதால் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.
செல் சார்ஜர் காரணமா?
இதனிடையே எஸ்11 பெட்டியில் பயணம் செய்து படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணி ஒருவர் கூறுகையில், செல்போன் சார்ஜர் செய்யும் பிளக்கில் இருந்து பயங்கர வெடி சப்தம் எழுந்து தீப்பிழம்பு வெளிப்பட்டதாகவும் அதனாலேயே தீப்பிடித்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த தகவலாலும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கான காரணம் என்ன என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment