எண்பதுகளின் இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு படங்களை தனது இயக்கத்தில் வெளியிட்ட பெருமைக்குரியவர் மணிவண்ணன்.
முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, விடிஞ்சா கல்யாணம், இங்கேயும் ஒரு கங்கை போன்ற படங்களை அப்படித்தான் ஆரம்பித்தார்.
இவரது படங்கள் தரத்திலும், எள்ளலிலும் கொடிகட்டிப் பறந்தவை. கோபுரங்கள் சாய்வதில்லையாக இருந்தாலும் சரி, இளமைக்காலங்களானாலும் சரி... ரசித்துப் பார்த்துவிட்டு வரலாம்.
தமிழில் த்ரில்லர் படங்களுக்கு தனி மரியாதை தந்தது இவரது நூறாவது நாள் படம்தான்.
மணிவண்ணனின் அமைதிப்படை, நையாண்டி - நக்கலின் உச்சம் எனலாம். அரசியலை இவர் அளவுக்கு அறிவார்த்தமாக சினிமாவில் 'சடையர்' செய்தவர்கள் குறைவு.
இதுவரை 49 படங்களை இயக்கியுள்ளார் மணிவண்ணன். தோழர் பாண்டியன் படத்துக்குப் பிறகு படங்கள் இயக்குவதை நிறுத்திக் கொண்டார். நடிப்பில் மட்டும் கலக்கி வந்தார். மேலும் தனது அரசியல் - தமிழுணர்வை நாம் தமிழர் கட்சியின் மேடைகளில் வெளிப்படுத்தி வந்தார்.
ஈழத் தமிழர் உணர்வாளர்கள் மத்தியில் பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டவராகத் திகழ்கிறார் மணிவண்ணன். இன்றைய இயக்குநர்கள் சீமான், சுந்தர் சி என பெரிய பட்டாளமே மணிவண்ணனிடமிருந்து வந்தவர்கள்தான்!
உடல்நிலை காரணமாக நடிப்பையும் குறைத்துக் கொண்ட மணிவண்ணன், இப்போது மீண்டும் ஆரோக்கியத்துக்குத் திரும்பியுள்ளார்.
தனது 50வது படமாக அமைதிப் படையின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் கதாநாயகனாக இவரது ஆஸ்தான நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். படத்தின் தலைப்பை இப்போதைக்கு இருவரும் இணைந்து கலக்கிய அமைதிப்படை பார்ட்-2 என பெயரிட்டிருக்கிறார்கள். பிறகு மாற்றம் செய்யப்படலாம் எனவும் தெரிகிறது.
அமைதிப்படை படத்தில் உள்ளதுபோல், வழக்கமான கேலி, கிண்டலை கலந்து திரைக்கதை அமைக்கப்படடுள்ளதாக மணிவண்ணன் கூறியுள்ளார். தற்போதை அரசியலில் ஈழம் தொடங்கி, ஸ்பெக்ட்ரம் வரையிலான பல சம்பவங்களையும் கலந்து காமெடி படமாக உருவாக்கப் போகிறாராம்.
No comments:
Post a Comment