டில்லியிலிருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 25 பயணிகள் பலியானார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டில்லியிலிருந்து சனி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு வந்துகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் நெல்லூர் ரெயில் நிலையத்திலிருந்து சுமார் 4.30 மணியளவில் புறப்பட்ட சிறிது நேரத்தில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் எஸ்-11வது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.
விபத்து நடந்த இடத்திற்கு உடனே சென்ற நெல்லூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இது வரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத்தெரிகிறது. மின் கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று தெரிகிறது. தூங்கும் வசதி கொண்ட இந்த 2ம் வகுப்பு பெட்டியிலிருந்து இதுவரை 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் நெல்லூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீப்பிடித்த பெட்டியில் 72 பயணிகள் பயணம் செய்தாக தெரிகிறது.
தகவல் அறிய வசதி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த விபத்து குறித்து தகவல் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. 044- 25357398, 044-25357398, 2345865866, 044-25330825 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவலை அறியலாம். நெல்லூரில் தகவல் அறிய - 08612575038 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 09:30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் இலவசமாக அழைத்துச்செல்லப்படுவர் என ரெயில்வே தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment