ஜன்லோக்பால் மசோதாவை கொண்டு வராவிட்டால் மத்திய அரசே கவிழ்ந்துவிடும் என்று அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார். ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் அன்னா குழுவைச் சேர்ந்த 3 பேர் கடந்த புதன்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்களோடு அன்னா ஹசாரேயும் நேற்றுமுன்தினம் முதல் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.
இந்த நிலையில், அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவை சேர்ந்த 3 பேரும் உண்ணாவிரதத்தை நேற்றும் தொடர்ந்தனர். காலை 11 மணிக்கு உண்ணாவிரத மேடைக்கு வந்த அன்னா ஹசாரே பேசியதாவது: வலுவான லோக்பால் அமைப்பை ஏற்படுத்த ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இதற்காக நடத்தப்படும் காலவரையற்ற உண்ணாவிரதம் பெரிய போராட்டமாக மாறிவருகிறது. வலுவான லோக்பாலை அமைக்காவிட்டால் இந்த ஆட்சியே கவிழ்ந்துவிடும். இவ்வாறு அன்னா ஹசாரே பேசினார்.
‘மின்சாரத்தை துண்டித்து
கூட்டத்தை தடுக்க சதி’
புதுடெல்லி : அன்னா குழுவின் இந்த போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு மிகவும் குறைவாக இருந்த நிலையில், அன்னா உண்ணாவிரதத்தை தொடங்கியதும் ஆதரவாளர்கள் கூட்டம் அதிகரித்தது. நேற்றுமுன்தினம் மாலை போராட்டம் நடக்கும் ஜந்தர் மந்தரில் 10 ஆயிரம் பேர் கூடினர். நேற்று மீண்டும் கூட்டம் குறைந்தது. காலையில் 400 ஆதரவாளர்கள் மட்டுமே கூடியிருந்தனர்.
டெல்லி உட்பட 7 வடமாநிலங்களில் ஏற்பட்ட மின்தடை காரணமாகவே மெட்ரோ ரயில் இயங்காததால் கூட்டம் குறைந்ததாக அன்னா குழுவினர் தெரிவித்தனர். அன்னா குழுவை சேர்ந்த குமார் விஸ்வாஸ் அன்னா போராட்டத்துக்கு கூட்டம் சேர்வதை தடுக்க சதி திட்டம் தீட்டி 7 மாநிலங்களில் வேண்டுமென்றே மின்தடையை அரசு ஏற்படுத்தி உள்ளதாக குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில்,'' மத்திய அரசு சர்வாதிகார மனப்பான்மையுடன் செயல்படுகிறது. இன்றைக்கு டெல்லி உட்பட 7 மாநிலங்களில் மின்சாரமே இல்லை. மின்சாரத்தை துண்டிக்கலாம், மெட்ரோ ரயிலை நிறுத்தலாம், பஸ், ஆட்டோக்களை தடுக்கலாம். ஆனால், அன்னா குழுவுக்கு மக்கள் ஆதரவு அளிப்பதை தடுக்கவே முடியாது'' என்றார்.
No comments:
Post a Comment