தூத்துக்குடி வைகுண்ட பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 90 பவுன் நகைகள் திருட்டுப் போனதாக நாடகமாடிய அதிமுக நிர்வாகி துரைப்பாண்டி கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்ட அதிமுக விவசாய அணி பொருளாளர் துரைப்பாண்டி (47). கட்டிட கான்டிராக்டர். அவர் அங்குள்ள வைகுண்ட பெருமாள் கோவில் தர்மகர்த்தாவாக கடந்த 7 ஆண்டுகளாக இருந்தார். அவர் தொழில் தொடர்பாக விருதுநகரில் உள்ள வீராச்சாமி தெருவில் வசித்து வந்தார்.
இந்நிலையில் வைகுண்ட பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 90 பவுன் நகைகளை தனது வீட்டில் உள்ள பீரோவில் வைத்து விட்டு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் நெல்லை கோவில் திருவிழாவுக்கு சென்றார். திருவிழா முடிந்து வீடு திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த கோவில் நகைகள் காணாமல் போனதாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ சேதமாகி இருந்தது. வீட்டுக் கதவு, ஜன்னலில் பாதிப்பு இல்லை. மோப்ப நாய் வரவழைத்து சோதனை நடத்தியபோது அது வீட்டுக்குள்ளேயே சுற்றி வந்தது. தடயவியல் சோதனையிலும் வேறு நபர்களின் ரேகைகள் கிடைக்கவில்லை.
இதனால் போலீசாருக்கு துரைப்பாண்டி மீது சந்தேகம் எழுந்தது. அவர் தர்மகர்த்தாவாக இருந்த வைகுண்ட பெருமாள் கோவில் அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ளது. இந்நிலையில் கோவில் நிர்வாகத்திடம் இருந்து துரைப்பாண்டிக்கு கடந்த 26ம் தேதி ஒரு கடிதம் வந்தது.
அதில், தங்களின் தர்மகர்த்தா பதவி காலம் முடிவடைந்து விட்டதால் கோயில் நகைகளை அடுத்த 15 நாட்களுக்குள் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே துரைப்பாண்டி மீது மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டபோது செலவுக்காக நகைகளை ஒரு தனியார் நிறுவனத்தில் அடகு வைத்திருப்பதும், அவரே கோவில் நகைகள் திருடுபோய்விட்டதாக நாடகம் ஆடியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
No comments:
Post a Comment