குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் 'தருண் கிரந்தி விருதுகள்' வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் அந்த மாநில முதல்-மந்திரி நரேந்திரமோடி கலந்து கொண்டார்.
விழாவில், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த டெல்லி மேல்-சபை காங்கிரஸ் எம்.பி. விஜய் தர்தா, யோகாகுரு பாபா ராம்தேவ் ஆகியோருக்கும், ஜெயின் சர்வதேச வர்த்தக சங்கத்துக்கும் தருண் கிரந்தி விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் காங்கிரஸ் எம்.பி. விஜய் தர்தா பேசுகையில், நரேந்திரமோடியை வெகுவாக பாராட்டினார். அர்ப்பணிப்பு மனப்பான்மையுடனும், உறுதியுடனும் செயல்படுவதில் நரேந்திரமோடி புலியைப் போன்றவர் என்று அப்போது அவர் கூறினார்.
இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதன்பிறகு பேசிய நரேந்திரமோடி, தன்னை புகழ்ந்து பேசியதால் விஜய் தர்தாவுக்கு அவரது கட்சியில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்று குறிப்பிட்டார்.
நரேந்திரமோடியை புகழ்ந்து பேசியதற்காக விஜய் தர்தாவுக்கு கட்சி மேலிடம் நோட்டீசு என்று நாளைக்கு (அதாவது இன்று) பத்திரிகைகளில் பெரிய அளவில் செய்தி வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அப்போது அவர் நகைச்சுவையாக கூறினார்.
இதைத்தொடர்ந்து கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, தான் பேசியது குறித்து காங்கிரஸ் எம்.பி. விஜய் தர்தா விளக்கம் அளித்தார்.
தான் கலந்து கொண்ட மத விழாவில், நரேந்திரமோடியை பற்றி அரசியல் நோக்கத்தில் எதுவும் கூறவில்லை என்றும், அவரைப்பற்றி தனது மனதில் உள்ள கருத்தை வெளிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். விழா நடத்துபவர்களை பற்றி நல்ல விதமாக பாராட்டி பேசுவது நமது பண்பாடு. அந்த வகையில்தான் அந்த நிகழ்ச்சியில் நான் பேசினேன். எனது கருத்துக்களை அரசியல் நோக்கத்தில் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் அப்போது விஜய் தர்தா கூறினார்.
நரேந்திர மோடியை, காங்கிரஸ் எம்.பி. விஜய்தர்தா பாராட்டி பேசியது குறித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன திவிவேதியிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறுகையில்; இதுகுறித்து, குஜராத் மாநில பொறுப்பை கவனிக்கும் பொதுச்செயலாளரிடம் இருந்து விவரங்கள் கிடைத்த பிறகுதான் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி தீர்மானிக்க முடியும் என்றார்.
No comments:
Post a Comment