லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் ககன் நரங், வெண்கலப்பதக்கம் வென்றார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள முதல் பதக்கம் இதுதான் என்பதால் இந்தியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா, ககன் நரங் ஆகியோர் களமிறங்கினர்.
இன்று மதியம் நடைபெற்ற தகுதி சுற்றில் மொத்தம் 47 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா அதிர்ச்சித் தோல்வியுற்று வெளியேறினார். அதே சமயம், தகுதி சுற்றில் 3வது இடத்தை பிடித்த இந்தியாவின் ககன் நரங் இறுதி சுற்றிற்கு முன்னேறினார்.
மாலையில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா, ருமேனியா உட்பட 8 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக புள்ளிகளை சேர்த்த ருமேனிய வீரர் அலின் ஜார்ஜ் 702.1 புள்ளிகளை சேர்த்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
அவரை தொடர்ந்து இத்தாலிய வீரர் நிக்கோலோ கேம்பிரினி 701.5 புள்ளிகளை பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். இதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் ககன் நராங் 701.1 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்றார்.
இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் கிடைத்தது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கம் பெற்று தந்துள்ள ககன் நரங், கடந்த 2006 மெல்போர்னில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 4 தங்கப்பதக்கங்களை வென்றவர். அதேபோல கடந்த 2010ம் ஆண்டு டெல்லி காமன்வெல்த் போட்டியிலும் ககன் நரங் 4 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு கிடைக்கும் 3வது பதக்கம் ஆகும். இதற்கு முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு இந்தியாவின் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் மூலம் வெள்ளிப்பதக்கமும், கடந்த 2008ம் ஆண்டு அபினவ் பிந்த்ரா மூலம் தங்கப்பதக்கமும் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.
கடந்த 2004 மற்றும் 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லத் தவறிய ககன் நரங், இந்த ஆண்டு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment