லண்டன் ஒலிம்பிக்கில் 81 பேர் கொண்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டியின் 2-வது நாளான இன்று
இந்திய வீரர்கள் களம் இறங்கும் போட்டிகளும், அப்போட்டி தொடங்கும் இந்திய நேரம் பற்றிய விவரமும் வருமாறு:-
துப்பாக்கி சுடுதல்:
துப்பாக்கி சுடுதலில் 4 வீராங்கனைகள் உள்பட 11 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது. ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பெரிய அணி இது தான். கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா மற்றும் ககன் நரங், ரஞ்சன் சோதி உள்ளிட்டோர் மீது பதக்க எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
துப்பாக்கி சுடுதலில் இன்று பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் மற்றும் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆகிய போட்டிகள் நடக்கின்றன. பெண்கள் துப்பாக்கி சுடுதலில் தான் லண்டன் ஒலிம்பிக்கின் முதலாவது தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் மட்டும் இந்தியாவின் விஜய்குமார் கலந்து கொள்கிறார். அவருடன் மொத்தம் 45 பேர் களத்தில் உள்ளனர். முதலில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தகுதி சுற்று நடக்கும். இதில் இருந்து 8 பேர் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள். இரவு 8 மணிக்கு இறுதி சுற்று நடைபெறும்.
2010-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் 3 தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியவரான விஜய்குமார், குவாங்ஷூவில் நடந்த ஆசிய விளையாட்டில் 2 வெண்கலம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டென்னிஸ்:
டென்னிஸ் போட்டிகள் விம்பிள்டனில் இன்று ஆரம்பிக்கின்றன. முதல் நாளில் பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா-ருஷ்மி சக்ரவர்த்தி ஜோடி களம் இறங்குகிறது. இவர்கள் முதல் சுற்றில் சீனத்தைபேயின் சுவாங் சியா ஜங்-ஹூசைய் சு வெய் இணையை(இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு) சந்திக்கிறார்கள்.
ஒற்றையரில் நம்பர் ஒன் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கொலம்பியாவின் அலெஜான்ட்ரோ பல்லாவையும், பெண்கள் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், செர்பியாவின் ஜான்கோவிச்சையும் சந்திக்க இருப்பது முதல் நாளில் நடக்கும் குறிப்பிடத்தக்க ஆட்டங்கள் ஆகும்.
ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோகன் போபண்ணா ஜோடி, பெலாரசின் மேக்ஸ் மிர்னி-அலெக்சாண்டர் பரி ஜோடியையும், லியாண்டர் பெயஸ்-விஷ்ணு வர்தன் இணை, நெதர்லாந்தின் ஜுலியன் ஜீன் ரோஜர், ராபின் ஹாஸ் இணையையும் எதிர்கொள்கிறது.
ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் வைல்டு கார்டு வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் முதல் ரவுண்டில் பின்லாந்தின் ஜார்க்கோ நிமினனுடன் மோதுகிறார்.
பளுதூக்குதல்:
சில ஆண்டுகளாக ஊக்கமருந்தினால் அல்லோலப்பட்டு வரும் இந்திய பளுதூக்குதல் அணியை தூக்கி நிறுத்தும் உத்வேகத்துடன் ரவிகுமார் (69 கிலோ), சோனியா சானு (48 கிலோ) ஆகியோர் ஒலிம்பிக்குக்கு வந்துள்ளனர்.
இதில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவிற்கான போட்டி இன்று நடக்கிறது. இரவு 8 மணிக்கு நடக்கும் இந்த பந்தயத்தில் 14 வீராங்கனைகள் போட்டியிடுகிறார்கள். இதில் ஸ்னாட்ச் மற்றும் கிளின் அண்ட் ஜெர்க் பிரிவில் போட்டி நடைபெறும். இரு பிரிவிலும் மூன்று முறை எடை தூக்க அனுமதிக்கப்படும்.சிறந்த நிலையை கணக்கிட்டு, ஒட்டுமொத்தத்தில் அதிக எடையை தூக்கும் வீராங்கனைக்கு தங்கப்பதக்கம் கிடைக்கும்.
டேபிள் டென்னிஸ்:
டேபிள் டென்னிசில் 19 வயது நிரம்பிய அங்கிதா தாஸ், சவும்யாஜித் கோஷ் ஆகிய இரு இந்தியர்கள் மட்டுமே இந்த முறை ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள். முதல் முறையாக ஒலிம்பிக்குக்கு வந்திருக்கும் இருவரும் இன்று களம் காணுகிறார்கள்.
அங்கிதா தாஸ் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் ஸ்பெயினின் சாரா ராமிரெசுடனும் (மாலை 4.30 மணி), ஆண்கள் ஒற்றையரில் சவும்யாஜித் கோஷ், பிரேசிலின் குஸ்தவோ சுபோயுடனும் (இரவு 8.30 மணி) மோதுகிறார்கள்.
துடுப்பு படகு:
துடுப்பு படகு போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் ஸ்கல் பிரிவின் தகுதி சுற்றில் இந்தியாவின் ஸ்வரன் சிங் (மாலை 5 மணி) களம் காணுகிறார்.
பேட்மிண்டன்:
பேட்மிண்டனில் மூன்று ஆட்டங்களில் இந்தியா இன்று பேட்டை சுழற்ற இருக்கிறது. ஆண்கள் ஒற்றையர் குரூப் பிரிவில் (பிற்பகல் 2 மணிக்கு பிறகு) இந்தியாவின் காஷியாப், பெல்ஜியத்தின் யுஹான் டானுடன் மோதுகிறார். கலப்பு இரட்டையரில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-திஜு கூட்டணி, குரூப் சுற்றில் இந்தோனேஷியாவின் டோன்டோவி அகமது-லிலியானா நாட்சிர் ஜோடியை (மாலை 5.30 மணி) எதிர்கொள்கிறார். இதே போல் பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி ஜோடி, ஜப்பானின் மிசூகி புஜீ-ரெய்கா காகீவா இணையுடன் (இரவு 8 மணி) மோதுகிறது.
No comments:
Post a Comment