நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி கிராமத்தில் வானுமாமலை என்ற இளைஞரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொன்றதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இன்று கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
குளத்து மண்ணை அள்ளுவது தொடர்பாக விசாரணைக்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், வானுமாமலை என்ற இளைஞரை கடந்த 24-ந் தேதி சுட்டுக் கொன்றார். இச்சம்பவம் நாங்குநேரில் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 2 நாட்களாக கடைகள் மூடப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டன.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருடன் மறுகால்குறிச்சி கிராமத்துக்குச் சென்ற இப்ராகிம், செல்வின் செல்வகுமார் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஆனால் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மறுகால்குறிச்சி கிராமமக்கள் சார்பில் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது
இப்போராட்டத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான இரா. நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி பழனி, பாஜக நிர்வாகி மகா கண்ணன், முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மைதீன் பாரூக் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இதில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment