தமிழில் 1980களில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலா. ரஜினி, கமல் ஜோடியாக பல படங்களில் நடித்தார். 1992-ல் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்க போட்டார். பின்னர் சமூக சேவகியாக மாறி பிராணிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டார்.
20 வருட இடைவெளிக்கு பிறகு அமலா தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். ‘லைப் இஸ் பியூட்டிபுல்’ என்ற தெலுங்கு படத்தில் அம்மா வேடத்தில் நடிக்கிறார். சேகர் கம்முல் இயக்குகிறார்.
மீண்டும் நடிப்பது பற்றி அமலா கூறியதாவது:-
நான் கடைசியாக நடித்த படம் 1992-ல் வந்தது. அதன் பிறகு எனது மகன் அகிலை வளர்ப்பதிலும் சமூக சேவைகளிலும் பிசியாகி விட்டேன். இப்போது அகில் வளர்ந்து விட்டான். அவன் பக்கத்தில் நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே தான் மீண்டும் நடிக்க வந்துள்ளேன். தொடர்ந்து படங்களில் நடிப்பதா? வேண்டமா? என்று இன்னும் முடிவு செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அமலா நடிக்கும் படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் அமலாவின் கணவர் நாகார்ஜுனா பங்கேற்று வாழ்த்தினார். அவர் பேசும்போது, இந்த படத்தில் அமலா நடித்துள்ளதால் எனக்கு இது சிறப்பு படம். அவர் செய்தது அம்மா பாத்திரம் என்றாலும் அக்கா மாதிரிதான் இருந்தார் என்றார்.
No comments:
Post a Comment