குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார் என்று யோகா குரு பாபா ராம்தேவ் புகழாரம் சூட்டியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமபாத்தில் நேற்று நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட யோகா குரு ராம்தேவ் விழா மேடையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியுடன் உட்கார்ந்திருந்தார்.
அப்போது ராம்தேவ் பேசியதாவது,
குஜராத்தில் நடக்கும் ஊழல் பற்றி அனைவரும் என்னிடம் கேட்கின்றனர். ஆனால் குஜராத்தில் ஊழல் நடப்பதாகவே தெரியவில்லை. மோடி எந்த தவறான செயலையும் செய்யவில்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். அப்படி இருக்கையில் மோடி ஏதாவது தவறு செய்திருந்தால் அவரையும் இந்நேரம் சிறையில் அல்லவா அடைத்திருப்பார்கள் என்றார்.
ராம்தேவ் மோடியைப் புகழ்ந்து பேசியுள்ளது அன்னா குழுவினரை எரிச்சலடைய வைத்துள்ளது.
இது குறித்து அன்னா குழு உறுப்பினர் சஞ்சய் சிங் கூறுகையில்,
மோடி மனிதத்தைக் கொன்ற கொலைகாரர். அவருடன் ஒரே மேடையில் தோன்றியதற்கான காரணத்தை ராம்தேவ் கூற வேண்டும். மோடியுடன் எங்களுக்கு எப்பொழுதுமே உடன்பாடு இல்லை என்றார்.
குஜராத் முதல்வர் மோடி தனது மாநிலத்தில் வலுவான லோக் ஆயுக்தா மசோதாவை நிறைவேற்றவில்லை என்று ஏற்கனவே ஹசாரே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னா குழுவினருடன் கைகோர்த்து போராடும் ராம்தேவ் மோடியைப் புகழ்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
No comments:
Post a Comment