தமிழக சட்டசபை சபாநயாகர் பதவியிலிருந்து ஜெயக்குமாரை முதல்ர் ஜெயலலிதா விலக்கவில்லை
என்றும் அவராகவே கோபப்பட்டு விலகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அதிமுக வட்டாரம்
அதிர்ந்து நிற்கிறது. அடுத்த சபாநாயகராக யார் நியமிக்கப்படவுள்ளார் என்பதும் எதிர்பார்ப்புகளை
ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில், சட்டசபை வரலாற்றில் ஒரு சபாநாயகர் ராஜினாமா செய்வது என்பது கிட்டத்தட்ட
ஒரு தலைமுறையினருக்கு இது புதிய விஷயமாகும். காரணம், கடைசியாக கடந்த 1977ம் ஆண்டுதான் சபாநாயகர் ஒருவர்
ராஜினாமா செய்த சம்பவம் நடந்தது. அதன்பிறகு இப்போதுதான் முதல் முறையாக ஒரு சபாநாயகர்
வெளியேறியுள்ளார்.
தமிழக சட்டசபை வரலாற்றில், 1967ம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்தபோது சபாநாயகராக இருந்தவர் தமிழர்
தந்தை என்று போற்றப்படும் சி.பா.ஆதித்தனார் ஆவார். பின்னர் அண்ணா மறைந்தபோது கருணாநிதி
முதல்வர் பதவிக்கு வந்தார். அப்போது ஆதித்தனாருக்கு அமைச்சர் பதவி கொடுக்க விரும்பினார்
கருணாநிதி. இதையடுத்து சபாநாயகர் பதவியிலிருந்து விலகினார் ஆதித்தனார்.
அதன் பின்னர் சபாநாயகராக இருந்தவர் கே.ஏ.மதியழகன். அவரது பதவிக்காலத்தின்போதுதான்
திமுக உடைந்தது. அதிமுக பிறந்தது. இதையடுத்து சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் மதியழகன்.
இதுதான் அரசியல் காரணங்களுக்காக ஒரு சபாநாயகர் பதவி விலகி முதல் சம்பவமாகும்.
அதன் பின்னர் எத்தனையோ சபாநாயகர்கள் வந்து விட்டார்கள். பி.எச்.பாண்டியன் இருந்தார்,
சேடப்பட்டி முத்தையா
இருந்தார். காளிமுத்து வந்தார். பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் இருந்தார், ஆவுடையப்பன் இருந்தார். ஆனால்
யாருமே பாதியில் விலகவில்லை, முழுமையாக பதவிக்காலத்தைக் கழித்தனர்.
இந்த நிலையில்தான் முதல்வர் ஜெயலலிதாவுடன் நேருக்கு நேர் மோதி தனது பதவியை உதறியுள்ளார்
ஜெயக்குமார். இதுதான் அதிமுகவினரை அதிர வைத்துள்ளது. இதுவரை ஜெயலலிதாவுடன் கோபம் கொண்டு
யாரும் பதவி விலகியதில்லை என்பதால் ஜெயக்குமாரின் செயல் அதிமுகவினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் தன்னை நம்பியுள்ள ஆதரவாளர்களை ஜெயலலிதா நீக்கியதாலும், தன் மீது அவருக்கு நம்பிக்கை
போய் விட்டதாலும் கோபமடைந்தே அவர் சபாநாயகர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிகிறது.
சட்டசபையி்ன் வைர விழாக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் சபாநாயகர் இல்லாவிட்டால்
பெரும் அசிங்கமாகி விடும் என்பதால் புதிய சபாநாயகரைத் தேர்வு செய்யும் வேலையில் ஜெயலலிதா
மும்முரமாகியுள்ளார். அடுத்த சபாநாயகர் யார் என்பதும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்த், ஸ்டாலின் போன்றோரை சமாளிக்கும் வகையிலான ஒருவரை நியமிக்கவே முதல்வர் ஜெயலலிதா விரும்புவதால்
யாருக்கு சபாநாயகர் பொறுப்பு கிடைக்கும் என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளில் ஒருவரான பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சான்ஸ் கிடைக்கலாம்
என்ற பேச்சும் அடிபடுகிறது.