தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு, அவரால் 1.1.1986 அன்று திறந்து வைக்கப்பட்டதும், சென்னை மாநகரின் முக்கியமான அடையாள சின்னங்களில் ஒன்றாகவும் விளங்குகின்ற ‘பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு அகற்றப்பட்டு வருவது குறித்த செய்தியினை அறிந்து, அதனை அகற்றும் பணிகளை நிறுத்தி வைத்து, அது தொடர்பாக விரிவாக விவாதித்திட நான் உத்தரவிட்டேன். அதன் அடிப்படையில், எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (5.9.2012) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், நிதி அமைச்சர், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், வீட்டுவசதித் துறை அமைச்சர், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலைகள் துறை முதன்மைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் உட்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், அரும்பாக்கம் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சுமார் 117 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணா நகர் மூன்றாவது நிழற்சாலை சந்திப்பு ஆகியவற்றினை இணைக்கும் வண்ணம் மேம்பாலம் அமைக்க 2010-ஆம் ஆண்டு அன்றைய தி.மு.க. அரசால் அனுமதிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும், அந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக அண்ணா வளைவு அகற்றப்படுகிறது என்றும் அதிகாரிகள் தரப்பில் இந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. அண்ணா வளைவினை அகற்றாமல் மேம்பாலப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அதிகாரிகளிடம் நான் விரிவான விவாதம் நடத்தினேன்.
இந்த விரிவான விவாதத்திற்குப் பின், பேரறிஞர் அண்ணாவின் பெயரில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் 1986 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட சென்னை மாநகரின் அடையாளச் சின்னங்களில் ஒன்றான அண்ணா வளைவினை அகற்றாமல் மேம்பாலப் பணிகளை மேற்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன். இதன்படி, ஈ.வெ.ரா. சாலையில் இருந்து அண்ணா நகர் நோக்கி செல்லும் மேம்பாலத்தை சிறிதளவு கிழக்குப் புறமாக மாற்றி அமைத்து மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment