பெங்களூர் ராஜாஜிநகரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நாட்டிலேயே முதல் முறையாக மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்படும் இ.எஸ்.ஐ. நிறுவனம் சார்பில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று பெங்களூர் விதானசவுதாவில் நடைபெற்றது.
இந்த விழாவில் மத்திய சுகாதார மந்திரி குலாம்நபி ஆசாத் கலந்து கொண்டு புதிய மருத்துவ கல்லூரியை தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:-
நாட்டிலேயே முதல் முறையாக தொழிலாளர் நலத்துறை சார்பில் பெங்களூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் கல்வி மற்றும் மருத்துவம் மிக முக்கியமானவை ஆகும். இதன் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்.
இந்த மருத்துவ கல்லூரியில் மருத்துவ பேராசிரியர்கள், பயிற்சி மருத்துவர்கள் என மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். மேலும், துணை மருத்துவர்களின் எண்ணிக்கையும் உயரும். அனைத்து சிகிச்சை வசதிகளும் கிடைக்கும். இதன் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள். அவர்களுக்கு நல்ல தரமான சிகிச்சை கிடைக்கும்.
நாட்டில் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை உயர வேண்டும். தென் இந்தியாவில் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது. மருத்துவ கல்லூரிகள் மூலம் தான் அதிக எண்ணிக்கையில் டாக்டர்கள் உருவாக்கப்படுவார்கள். பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். நோயாளிகளுக்கு தரமான சிகிச்சைகளை அளிக்க முடியும்.
நாட்டில் மருத்துவர்களின் தேவையில் பெரிய அளவில் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றால் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். இதை சரிசெய்யும் விதமாக மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், விரிவுரையாளர்களின் ஓய்வு பெறும் வயதை 70 ஆக உயர்த்தி சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் மருத்துவர்களின் பற்றாக்குறையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.
நாட்டில் மருத்துவ கல்லூரிகள் உள்பட 40 ஆயிரம் மாவட்ட, தாலுகா ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள் உள்ளன. இன்னும் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும்.
மருத்துவர்களின் பற்றாக்குறையை சரிசெய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உணவு பழக்கவழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் சமீபகாலங்களில் புற்றுநோய், சர்க்கரை, இதய நோய், ரத்த அழுத்தம் போன்ற பெரிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கும் விதமாக நாட்டில் சில முக்கியமான மாவட்டங்களில் சோதனை முறையில் மருத்துவ பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கும் போதிய அளவில் மருத்துவர்கள் கிடைக்கவில்லை. இந்த திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இன்னும் சுமார் 13 ஆண்டுகளில் புற்றுநோய் உள்ளிட்ட பெரிய நோய்களின் தீவிரம் அதிகமாக இருக்கும். இது நம் நாட்டிற்கு பெரும் சவாலாக இருக்கும். நாட்டின் மிக முக்கியமான ஆஸ்பத்திரியாக விளங்கும் நிமான்ஸ் ஆராய்ச்சி மருத்துவமனை பெங்களூரில் அமைந்துள்ளது.
இந்த ஆஸ்பத்திரிக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இனிமேல் அந்த நிறுவனத்தில் பல்வேறு வகையான புதிய படிப்புகளை தொடங்க முடியும். இன்னும் தரமான மருத்துவர்கள் கிடைப்பார்கள். வருகிற காலங்களில் இந்த ஆஸ்பத்திரி ஆசியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவமனையாக உருவாகும்.
இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.
No comments:
Post a Comment