நாடு முழுவதும் 1,058 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் கட்சியை விட பாஜக அதிக எம்எல்ஏக்கள் கொண்டிருப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை.
1961-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலத்தின் எம்எல்ஏக்கள் விவரத்தை, டெல்லி அருகில் உள்ள அசோகா பல்கலைக்கழக புள்ளிவிவர மையம் தொகுத்துள்ளது. இதில் 2014-ம் ஆண்டு பாஜக 1.058 எம்எல்ஏக்களுடன் நாட்டில் மிக அதிக எம்எல்ஏக்கள் கொண்ட கட்சியாக உருவெடுத்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் முதலிடம் பெற்றதும், காங்கிரஸ் கட்சியை மிஞ்சியதும் வரலாற்றில் இதுவே முதல்முறை.
மேலும் பிராந்திய அளவிலும், நாட்டில் பரவலாகவும் பாஜக இதுவரை இல்லாத அளவு எல்எல்ஏக்களை பெற்றுள்ளது.
பாஜகவை அடுத்து காங்கிரஸ் கட்சி இந்த ஆண்டு நாடு முழுவதும் 949 எம்எல்ஏக்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
1977 மற்றும் 1979 தேர்தல்களுக்குப் பிறகு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை ஆயிரத்தை விட குறைந்துள்ளது. ஆனால் இப்போதையை அளவுதான் (949) மிகக் குறைந்த எண்ணிக்கையாக உள்ளது.
வட இந்தியாவில் காங்கிரஸை விட பாஜக முன்னிலையிலும் மேற்கு இந்தியாவில் இரு மடங்கு அளவிலும் கிழக்கு இந்தியாவில் கிட்டத்தட்ட சம அளவிலும் எம்எல்ஏக்களை பெற்றுள்ளது.
வடகிழக்கில் மட்டுமே விளிம்பு நிலையில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. ஆனால் தெற்கில் அக்கட்சியின் பலம் குறைந்துள்ளது.
மக்களவை தேர்தல் முடிவுகளையும் சேர்த்து அலசினால், பாஜக இந்த ஆண்டு 282 எம்.பி.க்களுடன் முதலிடம் பெற்றுள்ளது. 282 என்ற எண்ணிக்கையை அக்கட்சி எட்டியது இதுவே முதல்முறை. இதுபோல் இந்திய அரசியலில் 44 எம்.பி.க்கள் என்ற மிக்குறைந்த எண்ணிக்கையை காங்கிரஸ் அடைந்ததும் இதுவே முதல்முறை.
இந்நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவுள்ள அசாம் (2016), கர்நாடகம் (2018) உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் மேலும் பலம் குறைய வாய்ப்புள்ளதாக அசோகா பல்கலைக்கழக அரசியல் புள்ளிவிவர மைய இயக்குநரும் பேராசிரியருமான சஞ்சய் குமார் கூறுகிறார்.
“அடுத்த பொதுத் தேர்தலின்போது முக்கிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்க வாய்ப்பில்லை. காங்கிரஸ் தோல்வி அடைவது மட்டுமன்றி மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் அக்கட்சி 3-வது மற்றும் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது” என்றார் அவர்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சந்தீப் தீட்சித் கூறும்போது, “கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிரான உணர்வுகள் மக்களிடையே உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சில மாநிலங்களிலும் பிறகு பொதுத் தேர்தலிலும் நாங்கள் தோல்வியடைய நேரிட்டது. பிறகு சில சட்டப்பேரவை தேர்தல்களிலும் இந்த நிலை தொடருகிறது.
மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறவோ, காங்கிரஸ் மிகப் பெரிய தோல்வியை அடையவோ இல்லை. உள்ளூர் பிரச்சினைகள் காரணமாகவே இந்தப் போக்கு காணப்படுகிறது. என்றாலும் இந்தப்போக்கின் தீவிரம் குறைந்துள்ளது” என்றார்.
மக்களவை தேர்தலில் லே மற்றும் ஜம்முவில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் இந்த இடங்களில் பாஜக முழுவதுமாக வெற்றி பெறவில்லை.
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நளின் கோலி கூறும்போது, “கர்நாடகம், கேரளம், இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் வடகிழக்கில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. மற்ற இடங்களில் அதன் செல்வாக்கு குறைக்கப்பட்டுவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவின் சிறப்பான ஆட்சி மற்றும் வளர்ச்சியை அங்கீகரித்துள்ள மக்களுக்கு நன்றி. காங்கிரஸ் கட்சி தனது தொடர் தோல்விக்கான காரணங்களை அறிய தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
No comments:
Post a Comment