Wednesday, December 31, 2014

தோனியின் மவுனமான வெற்றி! ஒரு பார்வை !!

தோனிக்கு வாய்ப்புகளை அள்ளித்தந்த சூழலோ, தங்கத்தட்டில் கிரிக்கெட் நுழைவோ அவருக்குச் சத்தியமாகத் தரப்படவில்லை. பீகார் அணியில் அவர் ஆடி,  அணி தோற்றுப் போன போட்டிகளின் கதைகள் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். இரவுகளில் கண்கள் சிவக்க டிக்கெட்களைப் பரிசோதித்துவிட்டு, பயிற்சிக்கு போன பொழுதுகளை அவரின் ஆறு சதங்கள் சொல்லிவிடாது.இலங்கையுடனான தொடரில்தான் இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். பந்தையே சந்திக்காமல் டக் அவுட்டாகி ஒரு நாள் போட்டி அவரை அன்போடு வரவேற்றது. டெஸ்ட் போட்டியும் பூமெத்தையாக அமையவில்லை. ஐந்து விக்கெட்டுக்களை 109 ரன்களுக்கு அணி இழந்திருந்த சூழலில், 'தோனி ஆடிவிட்டு வா!' என்று அனுப்பி வைத்தார்கள். மலைகளின் மீது ஏறி, ஏறி உரமேறி இருந்த கால்கள் சளைக்காமல் அன்று கைகளோடு இணைந்து போராடியது. முப்பது ரன்கள் அடித்திருந்த தோனிதான் கடைசி ஆளாக நடையைக் கட்டியிருந்தார். 

விட்டேனா, தீர்க்கிறேனா பார் என்று பாகிஸ்தான் கொக்கரித்துக் கொண்டிருந்த பைசலாபாத் டெஸ்டில், பாலோ ஆனைத் தவிர்க்கவே நூறுக்கும் மேலே ரன் அடிக்க வேண்டிய சூழல். சிரித்தபடி, ஆளைக் கொல்கிற அளவுக்கு அழுத்தம் இருந்தாலும் 'எல்லாம் ஆல்ரைட்!' என்கிற அதே முகபாவனையோடு வெறும் 93 பந்துகளில் சதமடித்து அணியைத் தோனி கரைசேர்த்தபொழுதுதான் கவனிக்க ஆரம்பித்தார்கள்.பதினொரு தையல்களோடு கும்ப்ளே கிரிக்கெட் வாழ்க்கை போதும் என்று கையசைத்து விடைபெற்ற பொழுது, எல்லா வகையான கிரிக்கெட்டிலும் அணித்தலைமை தோனி வசம் வந்திருந்தது. வெற்றியைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதுபோல அணி அடித்து ஆடியது.
கிரேக் சேப்பல் உண்டாக்கிவிட்டுப் போயிருந்த சீனியர்கள் வெளியே போங்கள் கோஷத்துக்கு முடிவுகட்டி, "எல்லாரும் முக்கியம் பாஸ்!" என்று தோனி அமைதியாக ஒருங்கிணைத்துக் கொண்டே போனதில் அணி முதலிடத்தை நோக்கி முன்னேறியது. இலங்கையுடனான தொடரில் அமைதியாக இரண்டு சதங்கள் அடித்துக் கூல் கேப்டன் கைகொடுக்க, அணி நம்பர் ஒன்னாக ஒன்றரை ஆண்டுகள் கோலோச்சியது. கிறிஸ்டன் அப்பொழுது ஏற்பட்ட உணர்வை இப்படிச் சொன்னார், "தோனி மட்டும் உடன் வருவார் என்றால்போருக்குக் கூடப்போகத் தயார்." 

தோல்வியில் இருந்து அணியைக் காக்க பேட்டிங் செய்வது, அசராமல் விக்கெட் கீப்பிங் செய்து ஸ்டம்பிங், கேட்சுகள் அள்ளுவது, ஏழாவது விக்கெட்டாக வந்தாலும் சதமடிப்பது எல்லாமும் செய்து முடித்த பின்பு, "நான் ஒன்னுமே பண்ணலைப்பா!" என்கிற மாதிரியான அந்தப் பாவனையில் தான் எத்தனை வசீகரம்?உச்சத்துக்குப் பிறகு உன்னைக் கீழே தள்ளும் உலகம் என்பது போல வெளிநாட்டுக்குத் தலைமை தாங்கி போன போட்டிகளில் எல்லாம் அடித்துத் துவைத்தார்கள். தொடர்ந்து எட்டுத் தோல்விகள் வந்து சேர்ந்த பொழுது தோனியை காய்ச்சி எடுத்தார்கள். புதிய அணியை நிர்மாணிக்கிறபொழுது நிலநடுக்கங்கள் எழத்தான் செய்யும் என்று அவருக்குத் தெரியும். சொந்த மண்ணில் தோல்வியைச் சுவைக்காத அணி இங்கிலாந்திடம் தொடரையே இழந்த பொழுது தோனி தோற்றுவிட்டார் என்று முடிவுரை எழுதினார்கள். 

அண்ணன் ஆஸ்திரேலியாவை அன்போடு அவர் வரவேற்றார். நாற்பது வருடங்களில் முழுவதும் தோற்கடிக்கப்பட்ட வரலாறு இல்லாத அந்த அணியை 4-0 என்று துவைத்துத் தொங்கவிட்டார்கள். தோனி எப்பொழுதும் போல ஓரமாக நின்றுகொண்டார். வெளிநாட்டு மண்களில் அதிகபட்ச தோல்விகளைப் பெற்ற தலைவர் என்று விமர்சிக்கப்படுகிற தோனி மிக அதிகபட்ச டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றிருக்கிறார் என்பதையும், வெற்றி சதவிகிதம் 45 என்று இருப்பதையும் இணைத்தே பேசவேண்டும். அடுத்த இடத்தில் இருக்கும் கங்குலி தலைமையில் ஆடிய இந்திய அணி 42.9 % வெற்றிகளைச் சுவைத்திருக்கிறது. 

இன்னம் ஆறு விக்கெட்டுகளைக் கழற்றி இருந்தால் முன்னூறு கைப்பற்றல்கள், கூடவே 124 ரன்கள் அடித்திருந்தால் ஐயாயிரம் ரன்களைத் தொட்டிருக்கலாம் என்கிற சூழலில், "போதும்!" என்று விடை பெறுகிற தோனியின் இலக்கு உலகக்கோப்பை என்பது அவரை ஆழமாகக் கவனிக்கிறவர்களுக்குப் புரியும்.

சச்சின், உலகமயமாக்கல் இந்தியாவில் நுழைந்த சூழலில், பல்வேறு வன்முறைகள், வலிகளுக்கு நடுவே தன் ஆட்டத்தின் மூலம் ஆறுதல் தந்தார் என்றால், "நான் இருக்கிறேன் பார்!" என்று அறிவித்துக்கொண்டு இருக்காமல் அர்ப்பணிப்போடு செயல்படுவதும் வெற்றிகளைத் தரும் என்று தோனி அறியச் செய்தார்.
அணியை அமைதியான ஆளுமையால் இறுகப் பிணைத்து வெற்றிகளைப் பெறமுடியும் என்கிற பாடத்தைத் தோனி நடத்தினார். நடுத்தரக் குடும்பத்தில் இருந்து மென்மையான புன்னகை, தீர்க்கமான ஆட்டத்தின் மூலம் உன்னதங்களை அடைய முடியும் என்கிற நம்பிக்கையையும் அவர் சேர்த்தே தந்துவிட்டுப் போயிருக்கிறார்.நான்கு ஓவர்கள், நான்கு விக்கெட்கள் மீதமிருந்த நிலையில், வருடம் முடிகிற தருணத்தில் வரலாறு ஒன்றையும் முடித்துக்கொள்வது ஆர்ப்பரிப்பு இல்லாமல் பாயும் சூரியக்கதிர் போன்ற தோனிக்கு எளிமையான விஷயமாக இருக்கலாம். ரசிகர்களுக்கு அப்படியிருக்காது. வெற்றிகளின்பொழுது ஓரமாக ஒரு ஸ்டம்ப்பை மட்டும் ஏந்திக்கொண்டு போகும் அவர் தற்பொழுது எல்லாரின் இதயங்களையும் எடுத்துக்கொண்டு மவுனமாகவே போகிறார். அறிவிப்பை அவர் சார்பாக நம்மையே அறிவிக்க வைத்திருப்பதில் இருக்கிறது அவரின் மவுனமான வெற்றி. 

கவாஸ்கர் சொன்ன அந்த வரிகள்தான் அடுத்த உலகக்கோப்பையில் தோனியிடம் நாமும் கேட்கிறோம் , "எனக்கு இன்றைக்குச் சாவு என்றால், 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோனி அடித்த இறுதி சிக்ஸரை மீண்டுமொரு முறை பார்த்துவிட்டு சாகவேண்டும்." நூறு கோடி பேரின் பெரும்பாலான நம்பிக்கைகளை மெய்ப்பித்த நீங்கள் இதையும் மீண்டுமொரு முறை செய்து முடிப்பீர்கள்.

சகாப்தங்கள் முடிவதில்லை ! 


No comments:

Post a Comment