Wednesday, December 24, 2014

கிறிஸ்துமஸ் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–

கிறிஸ்துவ சமுதாய மக்கள் டிசம்பர் 25ஆம் நாளன்று மிகச்சிறப்பாக கொண்டாடும் கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி தமிழகத்தில் வாழும் கிறிஸ்துவ மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்.

கிறிஸ்துவர்களை பொறுத்தவரை கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும், வேலைவாய்ப்புகளை பெறுவதற்கும் மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு சலுகையை 1974ஆம் ஆண்டில் வழங்கிய கழக ஆட்சி, அச்சலுகையை மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவர்களின் அனைத்து தலைமுறைகளுக்கும் நீட்டித்து 1975–ல் ஆணையிட்டது.

1989–ல் மாநில சிறுபான்மையினர் நல ஆணையம், 1999–ல் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், 2007–ல் சிறுபான்மையினர் நல இயக்ககம் ஆகியவற்றை உருவாக்கி, சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்திட வகை செய்தது.

அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச்சட்டத்தை 2006–ல் ரத்து செய்தது கிறிஸ்துவ சமயம், ‘தொண்டு சமயம்’ என்பதை தம் வாழ்க்கை மூலம் நிலைநாட்டிய அன்னை தெரசா அவர்களை போற்றி, 2010–ல் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கட்டப்பட்ட மகளிர் சுயஉதவிக்குழு கட்டடத்திற்கு “அன்னை தெரசா மாளிகை” எனப்பெயர் சூட்டியது. வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோருக்கு, 1968–ல் பேரறிஞர் அண்ணா தலைமையேற்று நடத்திய இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சிலைகள் எடுத்து சிறப்பித்தது.

தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக இன்று நிலைபெற்றுள்ள முல்லை பெரியாறு பேரணையை கட்டிமுடித்த பொறியியல் கலைமேதை ஜான் பென்னி குவிக் அவர்களுக்கு மதுரை பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் சிலையெடுத்தும் தொடர்ந்து கிறிஸ்துவ சமுதாயத்தை மதித்துப்போற்றி வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம்!

இந்நிலையில் அண்ணல் அம்பேத்கர் வகுத்துக்கொடுத்த இந்திய அரசியல் சாசனம் கூறும், “மதச்சார்பற்ற அரசு” எனும் கோட்பாட்டிற்கு விரோதமாகவும், “சமயச்சார்பற்ற கொள்கை என்பது போராடிப்பெற்ற உரிமை!

அரசியல் சாசனத்தினுடைய அடிச்சுவடு அதுதான்; உயிரும் அதுதான்!” என்று பண்டித நேரு கூறியதற்கு மாறாகவும் சிறுபான்மைச்சமுதாய மக்களைப்பாதிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் விடுமுறை நாளான டிசம்பர் 25 அன்று மத்திய அரசின் சில அமைச்சகங்களும், மத்திய அரசுக்கு ஆதரவான சில அமைப்புகளும் தனித்தனியே பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளதால் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினரும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சிலர் “இந்துத்வா” கோட்பாட்டை புகுத்த தீவிரம் காட்டுவதுடன், நாடு முழுமைக்கும் மதமாற்ற தடைச்சட்டத்தை கொண்டுவர போவதாகவும் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசும், மற்றைய அமைப்புகளும் நாட்டு நலன் கருதி இத்தகைய அணுகுமுறைகளை தவிர்த்திட வேண்டும்; சிறுபான்மையினர் நலன்களைக் காத்திட வேண்டும் என்பதை இவ்வேளையில் வேண்டுகோளாகத்தெரிவித்து, கிறிஸ்துவ மக்களுக்கு எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்:– 

டிசம்பர் 25–ம் நாளின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காக மத்திய பா.ஜ.க. அரசு கல்வி நிலைங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி அன்றைய தினத்தை நல்லாட்சி தினமாக கொண்டாடுவதற்கு கட்டுரைப் போட்டி, வினா–விடை போட்டி மாணவர்களிடையே நடத்தும் படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். 

இந்த சுற்றறிக்கை கிறிஸ்துவர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிற செயலாகும். மத்திய பா.ஜ.க. அரசின் சிறுபான்மை கிறிஸ்துவ மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஏற்கனவே எதிர்த்து நாம் குரல் கொடுத்திருக்கிறோம். இனியும் இத்தகைய தாக்குதல்களை தொடுக்க பா.ஜ.க. அரசு முனைந்தால் அதை முறிடியப்பதற்கு மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரளுவார்கள். நமது நாட்டில் வாழ்கிற கிறிஸ்துவ மக்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று சமநிலையோடு வாழ்வதற்கு டிசம்பர் 25–ம் நாளில் கிறிஸ்துமஸ் விழாவை அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்கிற சமூக நல்லிணக்க விழாவாக கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

டாக்டர் ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்):–

உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று இயேசுபிரான் விரும்பினார். உன் மீது நீ அன்பு காட்டுவதைப்போல அடுத்தவர் மீதும் நீ அன்பு காட்டுவாயாக! என்று அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தவர். ஆனால், அதை உணராத சில சக்திகள் நல்லிணக்கத்தை குலைக்கும் செயல்களை சில நாட்களாக அரங்கேற்றி வருகின்றன.

மற்றவர்களின் தவறுகளை மன்னித்து, நாட்டில் அமைதி நிலவவும், போட்டி பொறாமைகள் அகலவும், ஏழைகளின் துயரங்கள் அகலவும் உழைப்போம் என இந்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ (ம.தி.மு.க. பொதுச்செயலாளர்):–

தமிழகத்தில் இயேசு திருச்சபையினர் தமிழ் மொழிக்கும், ஏழை எளியோருக்கும் ஆற்றிய சேவை ஈடற்றது, உன்னதமானது. இந்தியாவில் மத வெறியை ஊக்குவித்து மனிதாபிமானத்தையும், மதச்சார்பற்ற தன்மையையும் சிதைக்கும் இந்துத்துவா சக்திகளின் அராஜகப்போக்கினை எதிர்கொண்டு முறியடிக்க இந்நன்னாளில் உறுதி ஏற்போம்.

தமிழகத்திலும், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவ பெருமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–

மனித மனங்களை இணைக்கும், மனித நேயத்தை வளர்க்கும் இணைப்பு சங்கிலி, அன்பு ஒன்றுதான் என்பதே ஏசுபிரானின் அவதார நோக்கமும் அவரது வாழ்வின் போதனையும். இவ்வினிய நாள் ஏசுபிரானின் அவதார சிறப்பை எடுத்துரைக்கும் நாளாக மட்டுமின்றி, அவரது போதனைகளை பின்பற்றி நாம் அனைவரும் வாழ்வாங்கு வாழும் நாளாக அமையட்டும் அன்பும் அமைதியும் தழைத்தோங்கி மனித உறவுகள் மேம்படட்டும். பிரிவினைகளும், பேதங்களும் மறைந்து சமத்துவமும், சகோதரத்துவமும் தழைக்கட்டும்.

ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி தலைவர்):–

இந்நாள் ஒருமத நல்லிணக்க நாளாகும். ஏழை, எளியோர் ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு பார்வையற்றோர், வாய் பேச முடியாத கேட்கும் திறனற்றவர்கள் தொழு நோயாளிகள் என்று சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட அப்பாவிகளுக்காக தேவ குமாரன் பிறந்த இந்நாளில் பிரார்த்தனைகள் செய்யப்படுவதோடு அவர்களுக்கு அன்னதானமும், பல்வேறு கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படுகின்றன.

அருட் தந்தை அருளப்பன் (கல்விக்கான ஆணையக செயலாளர்)

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் ஆரம்பித்துவிட்டாலே மக்கள் ஒருவருக்கொருவர் என்ன பரிசு கொடுக்கலாம் என்று சிந்திக்கின்றார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் பெற்றோர்களுக்கும், தங்களுடைய நண்பர்களுக்கும் எப்படியெல்லாம் வித்தியாசமான, அருமையான பரிசுகளை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளலாம் என்று பார்க்கிறார்கள்.

பரிசு என்பது அன்பின் அடையாளம், மகிழ்ச்சி பரிமாற்றத்தின் வெளிப்பாடு, மற்றவர்களின் மனதைக் கவரும் பரிமாற்றச்செயல். மனத்துயரங்களை மறந்து பரிசு கொடுத்து மகிழும் செயல். மனிதன் தன்னுடைய உண்மையான அன்பின் தன்மையை வெளிப்படுத்தும் செயல். அதே சமயத்தில் இதயத் தூய்மையையும், இல்லத்து அமைதியையும் நிலைநாட்டும் செயலாகும்.

இப்படி பார்க்கும்பொழுது கிறிஸ்துவ பிறப்பு விழாவிலே ஒரு மாபெரும் பரிசையும், பரிசளிப்பவரையும் நாம் பெருமிதத்தோடும், பெரு மகிழ்ச்சியோடும் நினைவு கூர்கின்றோம். உலகத்தை படைத்து பாதுகாத்து வருகின்ற எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவன் தாம் படைத்த மக்களுக்கு மாபெரும் பரிசை கொடுத்துள்ளார். இந்தப்பரிசு பொருளும் அல்ல. சாதாரண உயிரும் அல்ல. மாறாக மனிதனும் இறைவனுமாகிய தெய்வ மகன் இயேசு கிறிஸ்துவே. அன்னை மரியின் மகனாக பிறந்த இயேசு கிறிஸ்துவே பரம தந்தையின் மக்களாகிய நாம் பெற்ற மாபெரும் தெய்வீகப்பரிசாகும் (ஏசாயா 9:6)

தந்தையாகிய இறைவனுடைய பரிசாகிய இயேசு கிறிஸ்து காரிருளில் நடந்து வந்த மக்களுக்கு பேரொளியாவார். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போரின் மேல் உதிக்கும் சுடர் ஒளி ஆவார். இவரே மகிழ்ச்சியின் மன்னர். பாவத்திற்கும் மற்றும் எல்லா தீமைகளுக்கும் அடிமைகளாக இருக்கும் இவ்வுலக மக்களுக்கு உண்மையான விடுதலையை கொடுப்பவர். இவரே வியத்தகு ஆலோசகர். வலிமை மிகு இறைவன். அமைதியின் அரசர் (ஏசாயா 9:2–5)

தம்முடைய பிறப்பால் தம்மை விசுவாசிப்போருக்கு உண்மையான மகிழ்ச்சியும், அமைதியும், அறிவையும், வளமையையும் பெருமையும், உயர்வையும் கொடுக்கின்ற இறைமகன் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்து, இக்கிறிஸ்துவ பிறப்பு விழாவை அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாட நல்வாழ்த்துக்கள். மாபெரும் கொடை வள்ளலாகிய தந்தையாகிய இறைவனின் பரிசாகிய குழந்தை யேசுவை வணங்கி மகிழும் நாமும் ஒருவருக்கொருவர் அன்பு பரிசுகளையும் உளமார்ந்த வாழ்த்துக்களையும் முகமலர்ச்சியோடும், உண்மையான அன்போடும் வாழ்த்துக்கூறி மகிழ கிறிஸ்துவ பிறப்பு நல்வாழ்த்துக்கள்!

அகில இந்திய டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி., எஸ்.டி. நல கூட்டமைப்பு தேசிய தலைவர் எம்.ஆதிகேசவன் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் 

ஏசுபிரான் இந்த மண்ணில் பாவங்களை ரட்சிக்க அவதரித்தார். ஏசு பிறந்த தினம் கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் சகோதரத்துவம், அமைதியுடன் வாழ்வும், உலகம் முழுவதும் மக்களிடையே அமைதி தவழவும் எனது கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், இலட்சிய திராவிட முன்னேற்றக்கழக தலைவர் டி.ராஜேந்தர், தமிழக இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மேலை நாசர், சிறுபான்மை புரட்சி இயக்க நிறுவன தலைவர் லியாகத் அலிகான், அருந்ததி மக்கள் கட்சி தலைவர் வலசை ரவிச்சந்திரன் ஆகியோரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.'விழியே பேசு' வலைத்தளம் சார்பாக வாசகர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

No comments:

Post a Comment