"சாப்பிட்டு எத்தனை நாளாச்சு?" என்று சண்முகம் கேட்டதும் "நாலு நாளாகுது! எனக்கு இல்லைன்னாலும் பரவாயில்லை...என் சம்சாரத்துக்கு கொஞ்சம் சோறு கொடுங்க, சார் போதும்!" என்று சங்கர் சொன்னதும் பெரியவர் சண்முகம் ஒன்றும் பேசவில்லை. தன்னோட தூக்குச்சட்டியை எடுத்து நீட்டினார்.
"ரெண்டு பெரும் சாப்பிடுங்க"
பெரியவர் சண்முகம் நீட்டிய தூக்குசட்டியை வாங்கி கொண்டான் சங்கர். பசி வந்தால் பத்தும் பறந்து போகும்ன்னு சொல்வாங்க சங்கருக்கும் அப்படிதான். அவனுக்கு அந்த நேரம் மனதில் இருந்தது எல்லாமே ஜெகதீஸ்வரி தான். தன்னை நம்பிவந்தவளை பட்டினி போட கூடாது. இத்தனை நாளா சாப்பிடாம இருந்தாச்சு இன்னும் எதாவது ஆச்சுன்னா என்ன பண்ணுறது என்பது தான் அவன் மனதை ஆட்டிப்படைத்தது.
நாலு நாளுக்கு பிறகு ரெண்டு பேர் வயிறும் உணவால நிரம்பியது. தண்ணிக்கு தற்காலிக விடுதலை கொடுத்தாச்சு.
அனுபவமில்லாத வேலை! சுவத்து கூட சண்டை போட்டுதான் சங்கரால அழுக்கையும் பாசியையும் பிடுங்க வேண்டியதா இருந்துச்சு. பல தடவை பேலன்ஸ் தவறி உச்சியில இருந்து கீழ விழுந்து விடுவோமோன்னு பயமாக இருந்தது சங்கருக்கு. பயம் தானே ஒரு மனிதனின் வீழ்ச்சிக்கு முதல் காரணமாக இருக்கும். சாலைல நடந்து போகுறப்பவே இப்போ கீழே விழுந்து விடுவோம்ன்னு நினைச்சா கண்டிப்பா விழத்தான் செய்வோம். மலைல ஏறும் போது கூட கீழே விழமாட்டோம் இலக்கை கண்டிப்பா எட்டுவோம்ன்னு நினச்சா கீழ விழமாட்டோம். பயத்தை வென்றவங்க தான் சாதனை படைச்சிருகாங்.
ஜெகதி கீழே நிழல்ல உக்காந்துகிட்டே சங்கர் தட்டுதடுமாறி வேலை செய்யறதை அழுதப்படி பார்த்துகிட்டு இருந்தா.
ஏழைங்களோட பெரிய சொத்தே இந்த மாதிரி ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்கிற பாசம் தானே! அது சங்கரிடமும் ஜெகதியிடமும் அதிகமாகவே இருந்தது.
வேலை முடிந்ததும் சங்கர் கீழே வந்தான். 'அப்பாடா...இப்போ கூலி கிடைக்கும் எப்படியும் என் ஜெகதிக்கு நல்ல சாப்பாடு வாங்கி கொடுக்கணும்"ன்னு நினைத்தப்படி சங்கர் சண்முகம் பெரியவரிடம் போனான். ஆனால், கூலி கொடுக்கல்ல "மொத்தமா சனிக்கிழமை தான் கிடைக்கும்" -சண்முகம்
சங்கருக்கு தூக்கிவாரி போட்டது. சனிக்கிழமை வரைக்கும் ஜெகதிக்கு சாப்பாட்டுக்கு என்ன பண்ணுறது என்று நினைத்தான். அப்போதும் அவனுக்கு அவனது பசியோ, அவனது கஷ்டங்களா பெரிதாக படவும் இல்லை அதை பற்றிய நினைப்பு வருவதும் இல்லை. காரணம் அவனது மனசு முழுசும் ஜெகதீஸ்வரி தான் இருந்தாள்.
"இன்றைக்கு கூலிய மட்டுமாவது கொடுங்க....சனிக்கிழமை வரைக்கும் வசிக்கிறேன்! நாளையிலேருந்து வர்ற கூலியை மொத்தமாக சனிக்கிழமை வாங்கிக்கிறேன்..."-சங்கர்.
சங்கர் இப்படி பரிதாபமாக சொன்னதும் பெரியவர் சண்முகத்திற்கு அவனது நிலைமை புரிந்து விட்டது. அவர் சங்கரிடம் ரெண்டு ரூபா கூலி கொடுத்தார்.
காந்தி மண்டபத்திலே தான் சங்கரோட 'தனிக்குடித்தனம்' தொடங்கியது.
எதுக்கெடுத்தாலும் சாப்பிடாம போராடம் நடத்தினவரோட மண்டபத்தில சாப்பாட்டுக்காக போராட்டம் நடத்தும் சங்கர் அடைக்கலமானான்.
அப்ப எல்லாம் காந்தி மண்டபம் அடர்ந்த காடாக கிடக்கும். வாட்ச்மேன் கிடையாது. பாம்புகள் நிறையவே உண்டு! வானம் தான் கூரை, புதர்கள் தான் பள்ளியறை.
புருஷன் பொஞ்சாதி இணக்கமாக இருந்தா ஒரு தீபெட்டிக்குள்ள கூட சந்தோசமாக குடும்பம் நடத்த முடியும். அதற்கு சங்கர் ஜெகதீஸ்வரி நல்ல எடுத்துக்காட்டு.
முரட்டுத்தனமா பழக்கமில்லாத வேலை செய்ததால கையெல்லாம் செவந்திடுச்சு சங்கருக்கு. விரல்களை கூட மடக்க முடியல. ரணம்!
ஜெகதி பார்த்திட்டு கண்கலங்கினாள்.
"ஒரு நாள் அந்த சாமி நிச்சயமா கண் திறக்கும் ஜெகதிஸ்..."-சங்கர்
ஏழைங்க பசிபட்டினியிலும் கஷ்டங்களை சுமந்து கிட்டு வாளுராங்கன்ன இந்த மாதிரி ஒரு நம்பிக்கையும் தான் காரணம்.
"சாமி கண்ணா திறந்ததாலே தானே நீங்க எனக்கு கிடைச்சிருகீங்க" சொல்லிவிட்டு மறுபடி அழுதாள்.
'இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்த பிறகும் என் மேல இவ்வளவு பாசமா என் ஜெகதீஸ்வரிக்கு' என்று நினைத்து சங்கரும் கண்கலங்கினான்.
"நமக்கு ஒருநாள் விடியாமலா போயிடும்? குடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுகிட்டு கொடுக்கத்தான் போகுது...பாரேன்!"-சங்கர்
"பிச்சுகிட்டு கொடுக்குதோ இல்லையோ ....முதல்ல கூரையை கொடுக்கட்டும்ங்க..."ஜெகதீஸ்வரி
சங்கர் அழுதப்படி கூறியதும் சங்கரை சகஜநிலைக்கு கொண்டுவரும் பொருட்டு அப்படி பேசினாள் ஜெகதீஸ்வரி.
சங்கர் சிரித்தப்படி ஜெகதீஸ்வரியை அணைத்துக்கொண்டான்...
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்

No comments:
Post a Comment