ரத்த சரித்திரம் என்ற அட்டர் பிளாப் படத்தை கொடுத்தாலும் ராம்கோபால் வர்மா மீதான மரியாதையும் பிரமிப்பும் அப்படியேதான் இருக்கிறது ரசிகர்களுக்கு! விதை ஒன்று போட்டால் மரம் ஒன்றா முளைக்கும் என்பார்கள். ராம்கோபால் வர்மா போலவே பிரமிப்பை கொடுக்க வந்திருக்கிறார் அவரது சிஷ்யர் அமல் நீரத்.
மலையாளம் மற்றும் தமிழில் இவர் இயக்கி வரும் படம் அன்வர். கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தையும், மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது யாராலும். அதுபோன்ற சம்பவங்களை பின்னணியாக கொண்ட படம்தான் இது.
தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, எல்லா மொழி சினிமாவிலும் ரசிகர்களை கவர பயன்படும் சொல்லான 'காம்பினேஷன்' என்ற சொல்லையே இந்த படத்திற்கும் பயன்படுத்தலாம். பிரகாஷ்ராஜ், பிருத்விராஜ் காம்பினேஷனில் வரும் படங்கள் எல்லாமே ஹிட். அபியும் நானும், மொழி, வெள்ளித்திரை லேட்டஸ்டாக பயணம் என்று தொடர்கிறது இந்த காம்பினேஷன். இன்னும் ஒரு படமாக இந்த அன்வரையும் சேர்த்துக் கொள்ளலாம் ரசிகர்கள்.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த போலீஸ் உயரதிகாரியான ஹேமந்த் கர்க்கரேயை நினைவுபடுத்தும் கேரக்டரில் நடித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். இந்த கேரக்டரில் நடித்தது எனக்கு பெருமை என்கிறார் அவரே. மத தலைவர் ஒருவருடைய கையாளாக நடித்திருக்கிறார் ப்ருத்திவிராஜ். இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் மம்தா மோகன்தாஸ்.
படம் பார்க்கும் இளைஞர்கள் தீவிரவாதத்தை பார்த்து கண்ணீர் வடிக்காமல் அதற்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிற படமாக இது இருக்கும் என்கிறார் அமல் நீரத். படத்தில் காட்டப்படும் ஐந்து குண்டு வெடிப்பு சம்பவங்களை அவ்வளவு தத்ரூபமாக எடுத்திருக்கிறோம் என்கிறார் இவர்.

No comments:
Post a Comment