ஆப்பிரிக்கா நாடான துனிசியாவில் அதிபருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதை தொடர்ந்து அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.
அதை தொடர்ந்து எகிப்தில் 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்திய ஹோசினி முபாரக்குக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. 18 நாள் கலவரத்துக்கு பின்னர் அதிபர் முபாரக் பணிந்தார். நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். தற்போது ஆட்சி அதிகாரம் ராணுவத்திடம் உள்ளது. இங்கு நடைபெற்ற மக்களின் எழுச்சிமிகு போராட்டம் அரபுநாடுகளிலும் பரவியுள்ளது.
பக்ரைன், அல்ஜீரியா, ஏமன், ஈரான் நாடுகளிலும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். ஈரானில், அதிபர் மகமுத் அகதினேஜாத் அரசுக்கு எதிரானவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் தெக்ரானில் உள்ள ஆஷாதி சதுக்கத்தில் கூடிய போராட்டக்காரர்கள் சர்வாதிகாரி மடிய வேண்டும் என்று அதிபருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் போலீசார் பயன்படுத்தினர்.
பக்ரைனில் புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்குதல், அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும், வெளிநாட்டு சன்னி பிரிவினருக்கு பாஸ்போர்ட் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னர் ஹமாத் பின்லாசா அல்- கலிதாவுக்கு எதிராக போராட்டம் நடக்கிறது.
துராஷ், நுவைராத் கிராமத்தில் நடந்த போராட்டத்தின்போது போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசினார்கள். எனவே, போராட்டக்காரர்களை கலைக்க ரப்பர் குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் பயன்படுத்தினார்கள். இதுவரை நடந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். 10 பேர் காயம் அடைந்தனர்.
ஏமன் நாட்டில் அரசியல் சட்டம் மாற்றம் மற்றும் அதிபர் மாற்றம் கோரி 4-வது நாளாக போராட்டம் நடக்கிறது. நேற்று தலைநகர் சனாவில் நடந்த போராட்டத்தில் பொதுமக்களுடன் பல்கலைக்கழக மாணவர்கள், வக்கீல்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாலஸ்தீனத்தில் அதிபர் முகமது அப்பாசுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தனது மந்திரிசபையை பிரதமர் கலாம் பய்யாத் கலைத்துள்ளார். இன்னும் 6 வாரத்திற்குள் புதிய மந்திரிசபை பதவி ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment