மலபார் கோல்டு விளம்பர படத்தில் நடித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. இந்த விளம்பரத்தை இயக்கியிருப்பவர் கிருஷ்ணா. திருடா திருடி படத்தில் தனுஷின் அண்ணனாக நடித்திருப்பாரே அவரேதான் இவர். சுசி கணேசனின் ஃபைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமானவர். ஒரு புறம் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் அவரது லட்சியம் இயக்குனர் ஆவதே. எனவே வந்த வாய்ப்புகளை தவிர்த்துவிட்டு ஓடிக் கொண்டிருக்கிறார். அதுபோகட்டும்... இந்த விளம்பர படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான ஒரு சம்பவம்.
பாண்டிச்சேரி அருகில் உள்ள ஊரில்தான் இந்த விளம்பரத்தை படம் பிடித்தார்கள். ஷ§ட்டிங்குக்கு இளையராஜா வந்தால் அந்த பகுதியே அமைதியாக இருக்குமாம். வேறொன்றுமில்லை, அவர் மீதான மரியாதையின் காரணமாக! ஏதாவது பேச வேண்டும் என்றால் கூட அவர்களுக்குள் கிசுகிசு என்றுதான் பேசிக் கொள்வார்களாம். ஷாட் பிரேக்கில் ஓரமாக கண்மூடி அமர்ந்திருப்பாராம் ராஜா.
ஆனால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தெரியுமா பெரிய மனிதர், சின்ன மனிதர் சமாச்சாரமெல்லாம். சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தார்களாம் அவர்கள். அதில் ஒருவர் ஆர்.டி.பர்மனை கூப்பிடு... ஆர்.டி.பர்மனை கூப்பிடு என்ற அடிக்கடி குரல் கொடுக்க, கண் மூடிக் கொண்டிருந்த இளையராஜா மெல்ல குரல் வந்த திசையை கவனிக்க ஆரம்பித்தார்.
ஒரு தச்சு தொழிலாளிதான் அப்படி கூவிக் கொண்டிருந்தார். ஒரு சாதாரண தொழிலாளிக்கு ஆர்.டி.பர்மன் என்ற இசைமேதையை பற்றி தெரிந்திருக்கிறதே என்று வியந்த இளைராஜா, டைரக்டரை அழைத்து "தம்பி, அந்த பையன் ஆர்.டி.பர்மனை பற்றி தெரிஞ்சு வச்சிருக்கான். அவனை வரச்சொல்லு. பார்ப்போம்" என்றாராம். இதை கேட்டுவிட்டு அதிர்ந்தே போனார் கிருஷ்ணா. ஏன்?
வேறொன்றுமில்லை. இசைஞானியிடம் என்ன பதில் சொல்வதென்றுதான். ஐயா... அவன் ஆர்ட் டிபார்ட்மென்ட்டை கூப்பிடுன்னு சொன்னதுதான் உங்க காதுல ஆர்.டிபர்மன்னு விழுந்திருச்சு என்று தயங்கி தயங்கி சொல்ல, விழுந்து விழுந்து சிரித்தாராம் இளையராஜா.

No comments:
Post a Comment