ரசிகர்கள் என்ற பெயரில் நடிகர்களின் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் கலாச்சாரத்தில் இதுவரை சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, தல என முன்னணி நட்சத்திரங்களின் ரசிகர்கள் மட்டுமே ஈடுபட்டு வந்தனர். இப்போது இரண்டாம் கட்ட நடிகர்களின் கட்-அவுட்டுக்கும் பாலாபிஷேகம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள் என்ற போர்வையில் திரியும் இளைஞர்கள். தங்களுக்கு விருப்பமான நடிகரின் படம் வெற்றியடைய வேண்டும் என்று காவடி எடுப்பது, அலகு குத்துவது என்று போய்க் கொண்டிருந்த ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளாக புனிதமாக கருதப்படும் பாலை, நடிகர்களின் கட்-அவுட்களுக்கு ஊற்றி அபிஷேகம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
கமல்ஹாசன் போன்ற ஒரு சில நடிகர்கள் ரசிகர்களின் இதுபோன்ற மோசமான செயல்களை ஊக்கப்படுத்துவதில்லை; மாறாக தன் படம் ரீலிஸ் நாளில் ஏழைகளுக்கு உதவ வேண்டும், தன் கட்-அவுட்டுக்கு ஊற்ற பயன்படுத்தப்படும் பாலை கஷ்டப்படும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்வது கமலின் வழக்கம். நடிப்பு உள்ளிட்ட விஷயங்களில் கல்ஹாசனை ரோல்மாடலாக கருதும் நடிகர்கள், இதுபோன்ற நல்ல கருத்துக்களில் மட்டும் கமலை ரோல்மாடலாக ஏற்க மறுப்பது ஏனென்று புரியவில்லை.
முன்னணி நடிகர் என்ற பட்டியலில் இடம்பெறாவிட்டாலும், பிரபல நடிகர் என்ற பட்டியலி்ல் இருக்கும் நடிகர் ஜீவா நடித்திருக்கும் புதிய படமான கோ, நேற்று ரீலிஸ் ஆனது. இப்படம் வெற்றியடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் பால்குடம் தூக்கி, அபிஷேகம் செய்தனர். சென்னை வடபழனி ஏவி.எம்.ராஜேஸ்வரி தியேட்டரில் கோ படத்தை பார்க்க வந்த ரசிகர்கள், முன்னதாக மேளதாளம் முழங்க, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தியேட்டர் வாசலில் கட்டப்பட்டிருந்த ஜீவா கட்-அவுட் மீது தாங்கள் குடங்களில் கொண்டு வந்த பாலை ஊற்றி, வழக்கம்போலவே தலைவர் வாழ்க... என்ற கோஷத்துடன் தியேட்டருக்குள் சென்று படம் பார்த்தனர்.
தங்கள் தலைவர் நீண்ட நாள் வாழ வேண்டும்; அவர் நடித்த படம் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுவது ரசிகர்களின் இயல்புதான். அதில் தவறேதும் இல்லை. ஆனால் புனிதமான பொருளாக கருதப்படும் பாலை கட்-அவுட் மீது ஏன் ஊற்ற வேண்டும்? தலைவர் தெய்வத்துக்கு நிகரானவர் என்று ரசிகர்கள் சொன்னாலும், அந்த பாலை ஒருவேளை பால்கூட கிடைக்காமல் கஷ்டப்படும் ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்தால் எவ்வளவு உதவிகரமாக இருக்கும் என்பதை உணர மறுப்பது ஏன்? ஏழையின் சிரிப்பினில் இறைவனை காணலாம்.. என்பது ரசிகர்கள் புரிந்து கொள்வது எப்போது?
தங்கள் கட்-அவுட்டின் மீது பால் அபிஷேகம் செய்வதை ஊக்குவிக்கும் தலைவர்கள், நடிகர்கள் இருக்கும் வரை ரசிகர்கள் திருந்துவார்களா என்ன? இதுபோன்ற கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க யாராவது முன்வருவார்களா?

அந்த பாலை நாலு பேருக்கு கொடுத்து உதவ ஏன் முன்வர மாட்டேங்கிறாங்க ? இப்படி போன நாளைய நிலை
ReplyDeleteபடு மோசமாகும்.
http://mahaa-mahan.blogspot.com/