பெங்களூர் பீடதியில் ஆசிரமம் அமைத்து நிர்வகித்து வரும் சாமியார் நித்யானந்தா மீது செக்ஸ் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக நித்யானந்தா மீது கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவரது முன்னாள் சீடர் லெனினும் ஒரு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் தன் மீது விதிக்கப்பட்டு இருந்த ஜாமீன் நிபந்தனைகளை தளர்வு செய்யுமாறு நித்யானந்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வியாழன் அன்று இந்த வழக்கு நீதிபதி பச்சாப்புரே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. லெனின் கோர்ட்டுக்கு வந்திருந்தார். நித்யானந்தா வக்கீல் கூறுகையில், நித்யானந்தாவின் ஜாமீன் கடந்த வாரமே தளர்த்தப்பட்டது. ஆனால் சில எழுத்தர்களின் தவறால் நிபந்தனை தளர்வு வெளியே தெரியவில்லை. எனவே நிபந்தனை தளர்வு பற்றி மீண்டும் கோரிக்கை வைப்பதாக கூறினார்.
அரசு வக்கீல் கூறுகையில், ஏற்கனவே இதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் மீண்டும் கோருவது நீதிமன்ற அவதூறாகும் என்றார். பின்னர் நீதிபதி பச்சாப் புரே கூறியதாவது:-
சாமியார் நித்யானந்தாவின் ஜாமீன் நிபந்தனைகள் 3 மாதம் தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வழக்கை தொடர்ந்த லெனின் கோர்ட்டு குறித்து அவதூறாக பேசி வருகிறார். இது கோர்ட்டு அவமதிப்பாகும். நித்யானந்தா கோர்ட்டு நடவடிக்கையில் தலையிட்டு சாட்சியங்களை கலைப்பதாக கூறி கோர்ட்டை திசை திருப்பும் நோக்கில் லெனின் ஈடுபடுகிறார். இதுபோன்ற செயல்பாடுகளால் லெனின் சிறை தண்டனை பெறவும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
இதைக்கேட்டதும் அதிர்ச்சி அடைந்த லெனின் கோர்ட்டில் மயங்கி விழுந்தார். அவரை கோர்ட்டு ஊழியர்கள் வெளியே அழைத்துச் சென்றனர்.

No comments:
Post a Comment