தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் வடிவேலு தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் முதுகுளத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சத்தியமூர்த்தியை ஆதரித்து நேற்று இரவு அவர் பிரசாரம் செய்தார்.
அப்போது வடிவேலு பேசியதாவது:-
நான் ஏழை குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு முன்னேறியவன். குடும்ப கஷ்டம் என்றால் என்ன என்று எனக்கு நன்றாக தெரியும். தமிழக மக்களின் வறுமை, கஷ்டத்தை அறிந்த கருணாநிதி ஏழைகள் பயன்பெறும் விதத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் திருமண உதவி திட்டம், இலவச காப்பீடு, 108 ஆம்புலன்சு என பல சலுகைகளை அறிவித்து வழங்கி வருகிறார். ஏழை மக்களின் கஷ்டங்களின் பங்கெடுத்து உதவிகளை வழங்கியுள்ளார்.
இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருந்தபோது, கமுதி பஸ் நிலைய மாடி பகுதியில் இருந்து ஒரு கல் வந்து வடிவேலு வாகனத்தின் மீது விழுந்தது. இதையடுத்து கூட்டத்தில் கூச்சலும் பரபரப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய வடிவேலு, `நானும் இந்த பகுதியை சேர்ந்தவன் தான். எதற்கும் பயப்படமாட்டேன். ஒளிந்திருந்து கல் வீச வேண்டாம்.
நேருக்கு நேர் மோத வேண்டும். நான் எதற்கும் தயார்' என்று ஆவேசமாக பேசினார். அதேபோல சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகர் பேச இருந்த கூட்டத்தில் நேற்று இரவு கல்வீசப்பட்டது. இதுதொடர்பாக தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் மனோகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment