தமிழகத்தில் தொகுதி மறுவரையறையின், "ரிசர்வ்' எனப்படும் "தனி' தொகுதிகள் 44 உள்ளன. மலைவாழ் மக்களுக்கான தொகுதி, மூன்றில் இருந்து இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 13ம் தேதி நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில், இத்தொகுதிகளில் அபரிமிதமான ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. சென்னையில் உள்ள எழும்பூர், திரு.வி.க., நகர் தொகுதிகளில் மட்டும் குறைந்தளவாக 68.07 மற்றும் 68.31 சதவீத மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். மீதமுள்ள 44 தொகுதிகளிலும், 71.51 சதவீதத்தில் துவங்கி, அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் உள்ள கீழ்வேளூர் சட்டசபை தொகுதியில், 91.89 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன.
மலைவாழ் மக்களுக்கான எஸ்.டி., தொகுதியான, சேந்தமங்கலத்தில் 81.35 சதவீதமும், ஏற்காட்டில் 85.25 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகின.இந்த அபரிமிதமான ஓட்டுப்பதிவு, அரசியல்வாதிகள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. தி.மு.க., தரப்பில் கூறும்போது, "எஸ்.சி., மற்றும் எஸ்.டி., தொகுதிகளில் நாங்கள் கவனித்த, "கவனிப்பு' காரணமாகத் தான், எங்களை ஏமாற்றாமல், நம்பிக்கையை வீணாக்காமல், அனைவரும் வாங்கிய காசுக்கு ஓட்டு போட்டுள்ளனர். அவை அனைத்தும் எங்களுக்கான ஓட்டுகள் தான்' என, "மார்' தட்டுகின்றனர்.
ஆனால், அ.தி.மு.க., தரப்பில் கூறும்போது, "இம்முறை தி.மு.க., தரப்பில் கணிசமான எஸ்.சி., தொகுதிகளை வி.சி., மற்றும் காங்கிரஸ் வசம் தள்ளிவிட்டது. அங்கு, "பணப் பட்டுவாடாவை' நடத்தவும் முடியவில்லை. எனவே, அ.தி.மு.க., கூட்டணிக்குத் தான் வெற்றி வாய்ப்பு' என,"தில்லாக' நிற்கின்றனர்.இருபதுக்கும் மேற்பட்ட தனி தொகுதிகளில், 80க்கும் மேற்பட்ட சதவீதத்தில், ஓட்டுகள் பதிவானதால் தான், ஒட்டுமொத்த சதவீதமும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, இவை தான் இந்த தேர்தலின் முடிவை மாற்றியமைக்கப் போகின்றன. "தனி' தொகுதிகளின் முடிவை, பீதியுடன் அரசியல் கட்சியினர் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

No comments:
Post a Comment