ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’இன்று மத்திய புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இருப்பதில் எவ்வித வியப்பும் இல்லை. இருப்பினும், 20 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி மற்றும் சரத் குமார் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றிருக்கும் சூழ்நிலையில், 60 விழுக்காடு பங்குகளை வைத்துள்ள தயாளு அம்மாளின் பெயர் விடுபட்டிருப்பது தான் இதில் உள்ள வியப்புக்குரிய அம்சம்.
214 கோடி ரூபாய் ஷாகித் பால்வாவால் கருணாநிதிக்கு கொடுக்கப்பட்ட லஞ்சப் பணம். மத்திய புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்யவில்லை என்றால், இந்த 214 கோடி ரூபாய் லஞ்சப் பணம் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களை சென்றடைந்து இருக்கும்.
எனவே, நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால், கருணாநிதி உட்பட, கருணாநிதி குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம்பெற வேண்டும்.
வெறும் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகியிருந்த ஜெனிக்ஸ் எக்சிம் வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு ஷாகித் பால்வாவினுடைய ஸ்வான் டெலிகாம் நிறுவனம் 380 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை 17.12.2008 அன்று ஒதுக்கியது.
இந்தக் குழுமம் தான், 1970-களில் கட்டப்பட்ட அண்ணா மேம்பாலம் முதல் தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற 1,200 கோடி ரூபாய் மதிப்புடைய புதிய தலைமைச் செயலக கட்டிடம் வரை, தி.மு.க. அதிகாரத்தில் இருக்கும் போது கட்டப்படும் அனைத்து கட்டுமானப் பணிகளிலும் தொடர்பு கொண்டிருக்கிறது. தமிழக அரசின் 2,000 கோடி ரூபாய் உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டத்தை இந்தக் குழுமம் தான் நடைமுறைப்படுத்திக் கொண்டு இருக்கிறது.
கருணாநிதியுடன் நீண்ட காலமாக, நெருங்கிய தொடர்புடைய இந்த நிறுவனம் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதை தற்செயலாக ஏற்பட்டிருக்கும் நிகழ்வாக கருத முடியாது. கலைஞர் டி.வி.க்கு சென்ற 214 கோடி ரூபாய்க்கும் மேல், பல கோடி ரூபாய் பணம் கருணாநிதி குடும்பத்திற்காக, ஹவாலா பணப் பரிமாற்றம் மூலம் வெளிநாடுகளில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்ற கூற்றினை, வாதத்தினை இந்தத் தொடர்பு மேலும் வலுப்படுத்துகிறது.
கனிமொழி உட்பட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இந்த இமாலய ஊழலில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம்பெற வேண்டும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்த லஞ்சப் பணம் சென்றடைந்த இடம் முழுமையாக கண்டறியப்பட வேண்டும்.
இந்தியாவிற்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட பணம் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும். அப்பொழுது தான் அனைத்து ஊழல்களின் தாயாக விளங்கும் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலின் விசாரணை நியாயமான முடிவினை சென்றடையும்’’ என்று தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment