சட்டப்படி குற்றம் படத்தில் நீதிபதிகளை குற்றவாளிகள் மிரட்டுவது போன்றும்; அதனால் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நீதிபதிகள் நடந்து கொள்வது போன்றும் காட்சிகளை வைத்ததற்காக டைரக்டர் எஸ்.ஏ.சி.,க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 25ம்தேதி வெளியான சட்டப்படி குற்றம் படம் குறித்து இந்து தர்ம சக்தி இயக்கத்தின் செயலாளர் தேவசேனாதிபதி சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், சட்டப்படி குற்றம் படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இந்து சன்னியாசி உடையில் வரும் கதாபாத்திரம், யோகா போன்ற பல நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுப்பது போல் காட்டப்படுகிறது. பின்னர் கற்பழிப்பு உட்பட பல அயோக்கியத்தனங்களில் அந்த காவி உடையுடன் ஈடுபடுவதுபோல் காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இது இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது. அந்த கபட சன்னியாசி பாத்திரம், படத்தின் மூலக்கதைக்கு தேவையே இல்லை. சன்னியாசி பாத்திரம் இல்லாவிட்டாலும் மூலக்கதையை அது பாதிக்காது. அடுத்ததாக ஐகோர்ட்டு நீதிபதிகளையும் படத்தில் கேவலப்படுத்தி இருக்கின்றனர். 5 நீதிபதிகளை கடத்திச் சென்று காட்டுக்குள் வைத்துக் கொண்டு சில தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமான உத்தரவுகளை பெற்றுக்கொள்வது போல் படக்காட்சிகள் அமைந்துள்ளன. குற்றவாளி ஒருவனுக்கு தண்டனை வழங்கும் நிலையில், அந்த நீதிபதியின் குடும்பத்தினரை சிலர் மிரட்டுவதன் மூலம், குற்றவாளியை தண்டனையில் இருந்து தப்ப வைப்பதுபோல் மற்றொரு காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. அதாவது நீதிபதியின் குடும்பத்தினரை மிரட்டுவதன் மூலம் சாதகமான தீர்ப்பை பெறலாம் என்பதுபோல் படம் அமைந்துள்ளது. நீதிபதிகளை இப்படி சித்தரிப்பதன் மூலம் சமுதாயத்தின் மதிப்பை மிகவும் குறைத்து காட்டியுள்ளனர். நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. இந்த படத்தால் யாருக்கும் எந்த படிப்பினையும் இல்லை. சினிமா என்ற மீடியாவை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். எனவே எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்சார் போர்டு, சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் புகார் கொடுத்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகளை குற்றவாளிகளின் கைப்பாவையாக காட்டும் இந்த படத்தை தொடர்ந்து திரையிட தடை விதிக்க வேண்டும். இதற்கு தரப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி பி.ஜோதிமணி விசாரித்தார். இந்த வழக்கில் பதிலளிப்பதற்காக போலீஸ் கமிஷனர், சென்சார் போர்டு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஆகியவற்றுக்கு தனிப்பட்ட முறையில் நோட்டீஸ் அளிக்க மனுதாரருக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். எஸ்.ஏ.சந்திரசேகரன் தரப்பில் வக்கீல் எம்.டி.அருணன் நோட்டீசை பெற்றுக் கொண்டார். இந்த வழக்கில் 11ம்தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி பி.ஜோதிமணி அறிவித்தார்.
No comments:
Post a Comment