தே.மு.திக. தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா தலைவாசல் காய்கறி மார்க்கெட்டில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தலைவாசல் காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். வீரகனூர் சுவேதா நதியில் மழைக்காலங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அவதிப்படுகிறார்கள். அவர்களது குறையை போக்க அந்த நதியில் புதிய பாலம் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கை தமிழர் படுகொலைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் கலைஞர் மட்டுமே. அவர் தமிழ், தமிழ் என்று கூறி தமிழ் இனத்திற்கு துரோகம் செய்தவர். கடந்த 3 நாட்களாக நான் தேர்தல் பிரசாரத்தில் பேசும் போது தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை பெறும் என்று கூறினேன்.
அதே போல இந்தியா உலக கோப்பையை வென்று உள்ளது. இலங்கை நாடு கிரிக்கெட்டில் மட்டுமல்ல நம் தமிழ் இனத்திற்கும் எதிரி தான். உலக கோப்பையில் இலங்கையை இந்தியா விரட்டி அடித்தது போல தேர்தலில் எதிரி அணியை நாங்கள் விரட்டி அடிப்போம். தொண்டர்களாகிய நீங்களும் விரட்டி அடிக்க வேண்டும்.
உலக கோப்பைக்காக தோனி கடுமையாக பாடுபட்டு இமாலய சாதனை படைத்தார். அது போல விஜயகாந்த இமாலய வெற்றி பெறுவார். அ.தி. மு.க அணியில் உள்ள தே.மு. தி.கவும் வெற்றி பெறும்.தேர்தலில் உங்களுக்கு கறுப்பு மை வைப்பார்கள் நீங்கள் எதிர் அணிக்கு அந்த கறுப்பு மையை கரும் புள்ளி, செம்புள்ளியாக வைக்க வேண்டும்.நீங்கள் நூறுக்கும், சோறுக்கும், பீருக்கும் அடிமையாகி விடக் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
அவர் தலைவாசல், தம்மம்பட்டி, கூடமலை உள்பட பல்வேறு பகுதிகளில் கெங்கவல்லி தொகுதி தே.மு.தி.கவேட்பாளர் சுபா ரவியை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவருடன் மாவட்ட துணை செயலாளர் சுரேஷ் பாபு,மகளிர் அணி உமாராஜ், தலைவாசல் ஒன்றிய செயலாளர் கணேசன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment