தேர்தல் பிரசாரத்தின் போது, பத்திரிகையாளர்களை நெருங்க விடாமல் தவிர்த்து வந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், ஜெயலலிதாவின் அதிரடி பேச்சால், நிருபர்களை வீட்டுக்கு அழைத்து, தன் குமுறல்களை கொட்டித் தீர்த்ததுடன், "சொன்னதை அப்படியே எழுதுங்கள்' என்று கெஞ்சியது பரிதாபமாக இருந்தது.
சேலம் மாவட்டத்தை, வீரபாண்டி ஆறுமுகத்தின் கோட்டை என, அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அவரது தயவில் காலம் தள்ளும் அதிகாரிகளும், அவ்வப்போது விழாக்களில் அமைச்சர் புகழ்பாடி வந்தனர். பிரச்னையென்றால், பத்திரிகையாளர்களை அழைத்து பேட்டி கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சட்டசபை தேர்தல் நெருங்கிய வேளையில், பத்திரிகை நிருபர்களை கண்டு கொள்ளவில்லை.அங்கம்மாள் காலனி பிரச்னை, ஆறு பேர் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் அவரை மையப்படுத்தி, செய்திகள் பூதாகரமாக வெளியிடப்பட்டதால், பத்திரிகைகள் மீது கடும் கடுப்பில் இருந்தார்.தன் தேர்தல் பிரசாரத்தின் போது, நிருபர்களை நெருங்க விடவேயில்லை. அவர்கள் பின்தொடர்ந்தால், வெற்றிக்கு தடை வந்து விடும், வாக்காளர்களை "கவனிப்பது' வெட்ட வெளிச்சமாகி விடும் என்ற அச்சம் தான் காரணம்.ஒரு கட்டத்தில், "பத்திரிகைகளை நம்பி நான் அரசியல் செய்யவில்லை' என, வெளிப்படையாக கூறி வந்தார் வீரபாண்டி ஆறுமுகம். ஆனால், பிரசாரத்துக்கு வந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, சங்ககிரியில் பேசும்போது, வீரபாண்டி ஆறுமுகத்தை கடுமையாக வசைபாடியதுடன், "ஆட்சிக்கு வந்தவுடன், அவரால் பறிக்கப்பட்ட நிலம் பறிமுதல் செய்யப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்' என, அதிரடியாக பேசி சென்றார்.
அதுவரை, அமைச்சர் மீது வாக்காளர்கள் வைத்திருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் டேமேஜானது. தேர்தலுக்கு ஓரிரு நாள் உள்ள நிலையில், ஜெயலலிதா பேசியது, வாக்காளர்களை தமக்கு எதிராக செயல்பட வைத்துவிடுமோ என்ற பயத்தில், அவசர அவசரமாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.தன் வீட்டுக்கு பத்திரிகையாளர்களை வரவழைத்து, தடபுடல் விருந்துடன் பேட்டியளித்தார். அப்போது, ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும், தன் குடும்பத்தில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் பற்றியும், தன் மீதுள்ள குற்றச்சாட்டு குறித்தும் விளக்கம் அளித்தார்.பேட்டியை முடித்தபோது, "நான் கூறியதை ஒரு வரி விடாமல் அப்படியே எழுதுங்கள்' என, கெஞ்சியவர், "குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்காதீர்' என, நிருபர்களை கேட்டுக்கொண்டார். பிரசாரத்தின் போது, பத்திரிகையாளர்களை ஓரம்கட்டிய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், ஜெயலலிதாவின் அதிரடி பேச்சால், தன் உள்ள குமுறல்களை கொட்டித் தீர்த்ததுடன், நன்றாக, "கவர்' பண்ணுங்கள் என கூறி, விருந்துடன் பலருக்கு, "கவர்' கவனிப்பையும் வழங்கி ஆசுவாசமானார் அமைச்சர்."அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என, நடிகர் வடிவேலு பாணியில் கமென்ட் அடித்தபடி வந்தனர் சேலம் நிருபர்கள்.

No comments:
Post a Comment