மலையாளத்தின் முன்னணி நடிகர் பிருத்விராஜ்க்கும், மும்பையை சேர்ந்த பெண் நிருபர் சுப்ரியா மேனனுக்கும் நெருங்கிய உறவினர்கள் சிலர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. மே 1ம் தேதி திருமண வரவேற்பு நடைபெறுகிறது.
கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ப்ருத்விராஜ். மலையாளத்திலும் முன்னணி நடிகராக இருக்கிறார். பிருத்விராஜ் பற்றி பேட்டி எடுப்பதற்காக வந்த மும்பையை சேர்ந்த பெண் நிருபர் சுப்ரியா மேனனுக்கும், இவருக்கும் காதல் மலர்ந்ததாகவும், இருவரும் அடிக்கடி ஒன்றாக ஊர் சுற்றியதாகவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இந்த செய்தியை இருவருமே மறுத்து வந்தனர். ஆனால் இவர்களது காதல் தொடர்ந்து வளர்ந்து வந்தநிலையில், இந்த காதலுக்கு தனது பெற்றோரின் சம்மதத்தையும் வாங்கினார் பிருத்விராஜ். இதனையடுத்து இருவரது திருமணம் மே மாதம் 1ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் இன்று(25.04.11) காலை கேரளாவில் மாநிலம், பாலகாட்டில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் பிருத்விராஜ்க்கும், சுப்ரியா மேனனுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு வந்தவர்கள் விசேஷ அனுமதி சீட்டு வழங்கப்பட்டு இருந்ததாகவும், அதை காட்டியவர்கள் மட்டுமே திருமணத்திற்கு உள்ளே அனுமதிப்பட்டதாகவும் தெரிகிறது.
திருமணத்தை ரகசியமாக நடத்தினாலும் வரவேற்பை சிறப்பாக நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம் பிருத்விராஜ். மே 1ம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது.

No comments:
Post a Comment