கல்வி அறிவு வளர்ச்சியடைந்த மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்துள்ள நிலையில், கல்வியறிவில் பின்தங்கிய மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு அதிகரித்திருப்பது, அரசியல் கட்சியினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணி கட்சியினர், கடந்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் செயல்படுத்தவுள்ள இலவச திட்டங்களை முன் வைத்தும், அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு, ஊழல் மற்றும் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள இலவச திட்டங்களை முன்வைத்தும் பிரசாரம் செய்தனர். ஆனால், தேர்தல் கமிஷனின் கெடுபிடி காரணமாக, சரியான முறையில் பிரசாரம் செய்ய முடியாததால், ஓட்டுப்பதிவு சதவீதம் கடந்த தேர்தலை விட குறையும் என அரசியல் கட்சியினர் கருதினர்.
இதற்கு நேர்மாறாக, தமிழகத்தில் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, 77.8 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இது கடந்த தேர்தலை விட, 7.18 சதவீதம் கூடுதலாகும். 15 மாவட்டங்களில், 80 சதவீதத்திற்கு மேல் ஓட்டு பதிவாகியுள்ளது.
கல்வியறிவில், மாநிலத்தில், 23வது இடத்தில் உள்ள கரூர் மாவட்டத்தில், 86 சதவீத ஓட்டுகள் பதிவாகி, மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனால், 92.1 சதவீத கல்வி அறிவு பெற்றவர்கள் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், 68 சதவீத ஓட்டுகள் பதிவாகி, மாநிலத்தில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
கல்வியறிவு அதிகமுள்ள மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு குறைந்திருப்பது, படித்தவர்கள் ஓட்டுப்போட ஆர்வம் காட்டவில்லை என்பதையே காட்டுகிறது. அதே சமயத்தில், கல்வி அறிவு குறைந்த கிராமங்கள் நிறைந்த மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு அதிகரிப்பிற்கு காரணம், அரசியல் கட்சிகளின் இலவச திட்ட அறிவிப்பா அல்லது அரசியல் கட்சிகளின் பணப் பட்டுவாடாவா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

No comments:
Post a Comment