புதியத் தலைமைச் செயலகத்திற்கு அரசுத் துறைகளை மாற்றுவதாக கூறி முக்கியக் கோப்புகளை அழிக்கும் முயற்சியில் திமுக அரசு இறங்கியுள்ளது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக புகார் கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
புதிய தலைமைச் செயலகத்துக்கு அரசுத் துறைகளை மாற்றுவதாகக் கூறி அரசின் முக்கியமான கோப்புகளை அழிக்கும் முயற்சிகளை திமுக அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசு குறிப்பிட்ட அதிகார வரம்புக்குள்ளேயே செயல்பட முடியும். அன்றாடப் பணிகள், சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டுவது, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது ஆகிய பணிகளை மட்டுமே செய்ய முடியும்.
கொள்கை முடிவுகள், முக்கிய நிர்வாக முடிவுகளை மேற்கொள்ள முடியாது.
அரசுத் துறைகளை புதிய இடத்துக்கு மாற்றுவது போன்ற கொள்கை முடிவுகளை மேற்கொள்ள விதியில் இடமில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
எனவே அரசுத் துறைகளை கோட்டையிலிருந்து புதிய தலைமைச் செயலகத்துக்கு மாற்றுவதைத் தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
அதுபோல் துறைகளை மாற்றுவதாகக் கூறி முக்கியமான கோப்புகளை அழிக்க முயற்சி நடைபெறுவதாகக் கூறப்படுவதால் அதைத் தடுக்க தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக கோப்புகளை இப்போதுள்ள கோட்டையிலிருந்து வெளியிடங்களுக்கு கொண்டு செல்வதற்குத் தடை விதிக்க வேண்டும்.
கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்திலிருந்து முக்கிய கோப்புகளை வெளியே எடுத்து செல்வதைத் தடுக்க கோட்டைக்கு மத்தியப் படை பாதுகாப்பு அளிக்க தேர்தல் ஆணையம் ஆவன செய்ய வேண்டும் என்று அதிமுக கூறியுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது வாக்குப் பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பும், வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னரும், அதிமுக அமைச்சர்கள் பலர் முக்கியக் கோப்புகளை தீவைத்து எரித்ததாக தலைமைச் செயலக ஊழியர்களும், அரசு ஊழியர்களும் பரபரப்பாக பேசிக் கொண்டது நினைவிருக்கலாம். இந்த நிலையில் திமுக அரசு மீது புகார் கூறியுள்ளது அதிமுக.
முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கு-ஜெ. ஆஜராக உத்தரவு:
இந் நிலையில் முதல்வர் கருணாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜெயலலிதாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தலின் போது திமுக வன்முறையை கட்டவிழ்த்துவிட திட்டமிட்டிருப்பதாகவும், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினருக்கு தினப்படியை சரியாக வழங்கவில்லை இல்லை என்றும் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த அறிக்கைகளை கண்டித்து கருணாநிதி அவதூறு வழக்குகள் தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளில் ஜெயலலிதா ஜூன் 21ம் தேதியன்று கோர்ட்டில் ஆஜராகும்படி சென்னை செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நெடுமாறனுக்கும்...
அதே போல தமிழர் தேசிய இயக்கத் தலைவர்
பழ.நெடுமாறன் புதுக்கோட்டையில் அளித்த பேட்டியில் தேர்தல் கமிஷன் நடவடிக்கையால் தி.மு.க. தில்லுமுல்லு செய்ய முடியவில்லை என கருணாநிதி நினைக்கிறார் என்று கூறி இருந்தார். இது தொடர்பாகவும் கருணாநிதி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நெடுமாறனும் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
நெடுமாறன் ஜூன் 20ம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment