சிங்களர்களின் வெறியாட்டத்தை ஐ.நா. குழு அம்பலப்படுத்திவிட்டதால், தமிழர்களிடம் இந்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈழத்தில் நடந்த இறுதி கட்ட போரில் அப்பாவி தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா.உதவி அலுவலகம், மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. பெண் போராளிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். சரணடைந்த போராளிகள் சிதரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த தகவல்களை ஐ.நா. விசாரணை குழு சமீபத்தில் வெளியிட்டது.
சிங்கள அரசு ஏற்கனவே, இதுபோன்ற செயல்களில் நாங்கள் ஈடுபடவில்லை என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை பனகல்மாளிகை அருகே இன்று (21.04.2011) பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனூர் ஜெகதீசன் முன்னிலையிலும், விடுதலை ராஜேந்திரன் தலைமையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், போர்க் குற்ற செயல்களில் ஈடுபடவில்லை என இலங்கை அரசு தெரிவித்திருந்தது. அதை ஆமோதித்து இந்திய அரசும் ஐ.நா.சபையில் இலங்கை அரசுக்கு துணை போனது. உண்மையை ஐ.நா.குழு உலகுக்கு தெரிவித்துவிட்ட நிலையில் ஏற்கனவே பொய் சொன்ன இந்திய அரசு தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகத்தினர் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment