Sunday, July 22, 2012

ரூ. 12 கோடி பென்ஸில் ஏறப் போகும் பிரணாப்!

 பிரணாப் முகர்ஜியின் முகவரி மட்டுமல்ல, அவரது காரும் கூட மாறப் போகிறது. இதுநாள் வரை தனது மேற்கு வங்க மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட அம்பாசடர் காரையே பயன்படுத்தி வந்த பிரணாப் முகர்ஜி இனிமேல் மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் பயனபடுத்தப் போகிறார்.

கடந்த ஐம்பது ஆண்டு்களாகவே அம்பாசடர் காரில் மட்டுமே பயணித்து வந்தவர் பிரணாப் முகர்ஜி. ஆனால் தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பின்னர் அவர் முதல் முறையாக காரை மாற்றியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடியரசுத் தலைவருக்கான காராக ஜெர்மனியில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 600 காரே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


நீளமான லிமோசின் காரான இந்த பென்ஸானது, பல்வேறு வசதிகளுட்ன் கூடியதாகும். டிரைவருக்கும், குடியரசுத் தலைவருக்கும் இடையேயான பகுதி, சவுண்ட் புரூபுடன் கூடிய கண்ணாடியால் பிரிக்கப்பட்டுள்ளது.


பிடித்தமான இசையைக் கேட்கக் கூடிய வசதி உள்ளே இருக்கிறது. அதேபோல திரைப்படம் பார்க்கும் வீடியோ திரை வசதியும் உள்ளது. டிவியும் உள்ளது. செய்திகளையும் கேட்கலாம், பார்க்கலாம். அனேகமாக பிரணாப் முகர்ஜி செய்தி கேட்பதையே விரும்புவார் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தக் காரின் பாதுகாப்பு வசதி மிகவும் சிறப்பானது. அதாவது ஏவுகணையை விட்டுத் தாக்கினாலும் கூட இது சேதமடையாதாம். அந்த அளவுக்கு பக்காவான பாதுகாப்பு வசதி இதில் உள்ளது. அதேபோல எத்தனை துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டாலும் ஒரு குண்டு கூட உள்ளே போகாது. கிரேனட் தாக்குதலிலிருந்தும் கூட இது தப்பி விடும். வெடிகுண்டுகள் வெடித்தாலும் கூட காருக்கு ஒன்றும் ஆகாதாம்.

இதுகுறித்து கார் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறுகையில், ஏகே.47, எம் 67 ஆகிய துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டாலும் காருக்கு ஒன்றும் ஆகாது. அதேபோல அதி நவீனமான அமெரிக்க தயாரிப்பு கிரெனேடைத் தூக்கி வீசினாலும் காருக்கு ஒன்றும் ஆகாது.

காரின் கண்ணாடிகள் அனைத்தும் 60 மில்லிமீட்டர் பாலிகார்பனேட் கோட்டிங் கொடுக்கப்பட்ட கண்ணாடிகள் ஆகும்.

காரின் எரிபொருள் டேங்க்கின் கொள்ளளவு 90 லிட்டர் ஆகும். காரில் ஏதாவது தீவிபத்து ஏற்பட்டு விட்டால், எரிபொருள் டேங்க் தானாகவே மூடிக் கொள்ளும்.

டயர்கள் கூட புல்லட் புரூப் கொண்டவை. அதாவது டயரைப் பார்த்து யார் சுட்டாலும் கூட டயருக்கு ஒன்றும் ஆகாது. மேலும் கார் டயரில் சுத்தமாக காற்றழுத்தம் இல்லாவிட்டாலும் கூட, மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில், 30 கிலோமீட்டர் வரை தொடர்ந்து காரை ஓட்ட முடியும்.

காருக்குள் இருப்போர் ஏதாவது பிரச்சினை என்றால் எந்த இடத்திலிருந்தாலும் பேனிக் அலார்மை ஒலிக்க வைக்க முடியும். பேனிக் அலார்மை தொட்டு விட்டால், காரின் அனைத்துக் கதவுகளும் தானாகவே மூடிக் கொள்ளும். அதேசமயம், காருக்குள் இருப்போர் உள்ளே இருக்கும் தகவல் தொடர்பு வசதி மூலம் வெளியில் இருப்போருடன் பேச முடியும்.

இந்தக் காரில் 14 ஸ்பீக்கர்களுடன் கூடிய அட்டகாசமான ஹர்மான் கார்டன் லாஜிக்7 ஸ்டீரியோ மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது போக ஜிபிஎஸ் சாட்டிலைட் நேவிகேஷன் வசதியும் உள்ளது. போதிய அளவுக்கு வெளிச்சம் தரும் வகையிலான விளக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

கார் சீட்டுகள் அருமையான லெதர் குஷன் சீட்களாகும். இந்த இருக்கைகள் மழை மற்றும் குளிர்காலத்தில் மிதமான சூட்டைக் கொடுக்கும். அதேசமயம், வெயில் காலத்தில் குளிர்ச்சியைத் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக பிரத்யேக சிறிய மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.

டிரைவர் கேபின் தவிர குடியரசுத் தலைவர் அமரும் பகுதியில் இரண்டு வரிசை சீட்கள் உள்ளன. இரண்டு வரிசையும், எதிரும் புதிருமாக இருப்பது போல அமைக்கப்பட்டுள்ளன. அதாவது குடியரசுத் தலைவர், தன்னுடன் பயணிப்போருடன் அமர்ந்து பேசிக் கொண்டு செல்லும் வகையில் இந்த இருக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

காருக்குள்ளேயே சிறிய பிரிட்ஜும் உள்ளது. எனவே எத்தகைய சூடான பிரச்சினையாக இருந்தாலும் ஏதாவது கூலாக சாப்பிட்டுக் கொண்டு பேச முடியும்.

இப்படி சகல வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் காரின் விலை ஜஸ்ட் ரூ. 12 கோடிதான். இதுவரை பிரணாப் முகர்ஜி பயன்படுத்தி வந்த புல்லட் புரூப் பொருத்தப்பட்ட அம்பாசடர் காரின் விலை ரூ. 10 லட்சம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment