தனது 17 வயதில் அண்ணியை கற்பழித்து கொலை செய்தவருக்கு, அவரது 43வது வயதில் சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை அளித்து தீர்ப்பளித்துள்ளது.
சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் வசித்து வந்த வீட்டின் கீழ் பகுதியில், அவரது அண்ணன் ரமேஷின் மனைவியின் உடல் கடந்த 9.6.87 அன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்தனர்.
இதில் சுரேஷ்குமார், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அண்ணியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டு, அவர் மீதான குற்றச்சாட்டு சென்னை 2வது கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபணமானது.
கடந்த 1989ம் ஆண்டு இந்த வழக்கின் தீர்ப்பில் சுரேஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சுரேஷ் குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 1990ம் ஆண்டு சுரேஷ்குமார் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சுரேஷ் குமாருக்கு அளிக்கப்பட்ட விடுதலை தீர்ப்பை ரத்து செய்தது. மேலும் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த 1997ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து கடந்த 15 ஆண்டுகளாக சுரேஷ் குமார் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் சுரேஷ்குமார் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.தேவதாஸ் ஆகியோர் விசாரித்தனர்.
அதன்பிறகு அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
அண்ணியை கற்பழித்து கொலை செய்ததாக கூறப்படும் சுரேஷ்குமாருக்கு குற்றம் நடந்த போது 17 ஆண்டுகள், 2 மாதங்கள் வயதாகி இருந்தது. எனவே புதிய சிறார் சட்டத்தின்படி 18 வயது பூர்த்தி ஆகும் வரை ஒருவரை சிறுவனாக கருத வேண்டும்.
அந்த சிறுவன் குற்றம் செய்து அதற்கான சட்டப்படி அவன் விசாரிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனை 3 ஆண்டுகள் சிறுவர் சிறப்பு இல்லத்தில் தான் அடைக்க வேண்டும். ஆனால் சுரேஷ்குமார் விஷயத்தில், அந்த குற்றம் நடந்த போது அவன் சிறுவன்.
அவர் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு இருந்தால் கூட, சட்டப்படி சிறப்பு இல்லத்தில் தான் அடைக்க வேண்டுமே தவிர, சிறையில் அல்ல. ஆனால் இப்போது 43 வயதாகி இருக்கும் அவரை சிறப்பு இல்லத்தில் அடைக்க முடியாது. எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும்.
சிறார் சட்டத்தின்படி, குற்றம் செய்த சிறுவனுக்கு ஆயுள் தண்டனையோ, தூக்குத் தண்டனையோ விதிக்க கூடாது. முன்பு நடந்த குற்றங்களுக்கான நிவாரணத்தை, புதிய சிறார் சட்டத்தின் மூலம் ஒருவர் பெற முடியும். இதை அரசு தரப்பில் மறுக்கவில்லை.
எனவே அந்த சட்டத்தின்படி சுரேஷ்குமாரை சிறுவர் சிறப்பு இல்லத்துக்கு அனுப்ப முடியும். ஆனால் அவருக்கு தற்போது 43 வயதாகிறது. இப்போது அவரை சிறுவர் சிறப்பு இல்லத்துக்கு அனுப்புவது நடைமுறைக்கு ஒவ்வாது. ஆகவே அவரை விடுதலை செய்து உத்தரவிடுகிறோம் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நீண்ட ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ் குமார் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment