ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக லண்டன் செல்லும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்க தமிழர் அமைப்புகள் தயாராகி வருகின்றன.
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ள உள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் பந்துல ஜெயசேகர கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக மகிந்த ராஜபக்ச லண்டன் செல்வதும் அங்கு தமிழர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து விரட்டியடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
கடைசியாக எலிசபெத் மகாராணியின் வைர விழாவில் பங்கேற்க லண்டன் சென்ற மகிந்த ராஜபக்சவுக்கு விமான நிலையத்திலும் சரி அவர் தங்கியிருந்த இடத்திலும் சரி தமிழர்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றுதிரண்டு போராட்டங்களை நடத்தினர்.
தற்போதும் கூட ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து இலங்கை அணியை வெளியேற்ற வலியுறுத்தி தற்போது ஈழத் தமிழர்கள் ஒலிம்பிக் பூங்காவுக்கு வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மகிந்த ராஜபக்ச மீண்டும் லண்டன் செல்ல உள்ளார். இம்முறையும் ராஜபக்சவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழ் அமைப்புகள் அறிவித்துள்ளன.
No comments:
Post a Comment