ராஜஸ்தானில் கள்ளக்காதல் ஜோடியை பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக பெண்ணின் கணவன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தானின் சரடா நகர் அருகே கோலார் கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற வாலிபருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. 10 நாட்களுக்கு முன்பு இருவரும் ஊரை விட்டு ஓடினர். கடந்த சனிக்கிழமை அவர்கள் இருக்கும் இடத்தை உறவினர்கள் கண்டுபிடித்தனர். இருவரையும் பிடித்து கிராமத்துக்கு கொண்டு வந்தனர்.
நேற்று முன்தினம் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட முடிவுபடி, இருவரையும் மொட்டையடித்து அலங்கோலப்படுத்தினர். அதோடு விடவில்லை. பொதுமக்கள் முன்னிலையில் பெண், வாலிபரின் உடைகளை களைந்து நிர்வாணப்படுத்தினர். இருவரையும் மரத்தில் கட்டி வைத்து அடித்து, உதைத்தனர். 4 மணி நேரம் இந்த கொடுமை அரங்கேறியது. இது குறித்து தகவலறிந்ததும் போலீசார் வந்து இருவரையும் மீட்டனர். அப்போது கிராம மக்கள் சரமாரியாக கற்களை வீசி தாக்கினர். இதில் போலீசார் காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் பெண்ணின் கணவர் ஹம்ஜி உள்பட 8 பேரை நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். ராஜஸ்தானில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 7 நாளில் அறிக்கை அளிக்க மண்டல கமிஷனருக்கு முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் கூறுகையில், ‘இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். சட்டம் அனைவரையும் கட்டுப்படுத்துகிறது. சட்டத்தை தங்கள் கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்றார்.
No comments:
Post a Comment