தி.மு.க. தலைவர் கருணாநிதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- குடியரசு துணை தலைவர் தேர்தலில், வடமாநிலத்தைச் சேர்ந்தவரைத்தான் வேட்பாளராக நிறுத்த முயற்சிக்கிறார்கள். திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக இருக்கின்ற தி.மு.க. தென்னிந்தியாவில் உள்ள ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டி குரல் கொடுக்குமா?.
பதில்:- குடியரசு தலைவர் தேர்தலிலும்-குடியரசு துணை தலைவர் தேர்தலிலும் தெற்கே ஒருத்தர், வடக்கே ஒருத்தர், மேற்கே ஒருத்தர், கிழக்கே ஒருத்தர் என்ற பாகுபாட்டின்படி யாரும் நிற்கவில்லை. அந்தந்த நேரம், சூழ்நிலையைப் பொறுத்துதான் பரிந்துரைகளை செய்திருக்கின்றோம். அதைப்போல இப்பொழுதும் ஆராய்ந்து பரிந்துரைகளைச் செய்வோம்.
கேள்வி:- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நீங்கள் சொன்ன பதிலுக்கு மீண்டும் இப்போது ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?.
பதில்:- சிறுதாவூரில் அந்த கமிஷன் அறிக்கை வந்த பிறகு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டிருக்கிறார். அதுதான் அந்த அறிக்கையினுடைய மூலக்குற்றச்சாட்டு. நாங்கள் நடவடிக்கை எடுக்காததற்கு காரணம், ஜெயலலிதா குழுவினர் உச்சநீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெற்றார்கள். அந்த தடையினால் அது முடங்கியது.
கேள்வி:- தி.மு.க.வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் நெருங்கிச் செயல்படும் என்று எதிர்பார்த்த நிலையில், இப்படி ஒரு மோதல் வந்திருக்கிறதே?.
பதில்:- ராமகிருஷ்ணன்கள் நாங்கள் நெருங்கி வருவதற்கு விடமாட்டார்கள். இவ்வாறு கருணாநிதி கூறினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- கானாத்தூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்திருக்கிறதே?.
பதில்:- அந்த செய்தி நம்பத்தகுந்ததாக இல்லை. விசாரணை கைதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக வந்த செய்தியில், காவல் நிலையத்தில் இருந்த மண்எண்ணெயை அவர் எடுத்து உடலில் ஊற்றி தீயிட்டுக்கொண்டதாக வந்துள்ளது. குடும்ப அட்டை வைத்திருக்கும் ஏழை எளியோர்க்கே மண்ணெண்ணெய் முறையாக கிடைக்காத நிலையில் காவல் நிலையத்தில் ஏது மண்ணெண்ணெய்?. விசாரணை கைதி தீயிட்டுக்கொள்வதற்காகவே வாங்கிவைத்தார்களா?. அவர் தீயிட்டுக்கொண்டு சாகின்ற வரையில் அந்த காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் எல்லாம் எங்கே போய்விட்டார்கள்?.
கேள்வி:- தி.மு.க. மீது தனிப்பட்ட வெறுப்பு எதுவும் இல்லை என்றும், நில மோசடியை தடுக்க வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் நோக்கம் என்றும் ஜி.ராமகிருஷ்ணன் பதில் அளித்திருக்கிறாரே?.
பதில்:- ராமகிருஷ்ணனின் பதில் அறிக்கையை முழுவதும் படித்து பார்த்தால், அவருக்கு தி.மு.க. மீது தனிப்பட்ட வெறுப்பு இருக்கிறதா இல்லையா என்பதை யாரும் புரிந்துகொள்ள முடியும். தற்போது அவர் அளித்துள்ள பதிலிலே கூட, 28-2-2010 அன்று சிறுதாவூர் நிலப்பிரச்சினை குறித்து நீதிபதி சிவசுப்பிரமணியம் அறிக்கையை அளித்தார்,
அதற்கு பிறகு தி.மு.க. அரசு ஒன்றரை ஆண்டுகள் இருந்தது, அப்போது அந்த அறிக்கை மீது தி.மு.க. அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தி.மு.க. தலைவர்தான் விளக்க வேண்டும் என்று விளக்கம் கேட்டிருக்கிறார். நீதிபதி சிவசுப்பிரமணியம் விசாரணை கமிஷன் தி.மு.க. ஆட்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேண்டுகோளை ஏற்று அமைத்தவுடன், அந்த கமிஷனை எதிர்த்து ஜெயலலிதா தரப்பினர் உச்சநீதிமன்றத்திலே வழக்கு தொடுத்து, உச்சநீதிமன்றம் அதனை முடக்கிப் போட்டது.
சிவசுப்பிரமணியம் அறிக்கையை பேரவையிலே வைப்பதற்கே உச்சநீதிமன்றத்திடம் மனு தாக்கல் செய்து, அனுமதி பெற்று அதற்கு பிறகுதான் அவையிலே அதுவைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தடை காரணமாகத்தான் அந்த அறிக்கையின் பரிந்துரை மீது தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதுதான் உண்மை. ராமகிருஷ்ணன் இதைப்பற்றி விசாரித்து தெரிந்து கொள்ளலாம்.
இதைப் பற்றியெல்லாம் தி.மு.க.வின் மீது குறைகளைக் கூற முன்வருகின்ற ராமகிருஷ்ணன், தற்போது ஆளுங்கட்சியாக உள்ளவர்களைப் பார்த்து கேள்வி கேட்டால்தானே அதன்மீது நடவடிக்கை எடுக்க இயலும்.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment