நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் பேசிய மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மரியாதை இருக்கும் வரைதான் மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்போம் என்று நிபந்தனை விதித்ததுடன், மாநிலத்தைப் பொருத்தவரை இனி காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்றும், அறிவித்தார்.
கூட்டணியில் இருந்து விலகுவதற்கு நிபந்தனை விதித்துள்ள மம்தாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மம்தாவின் இந்த அறிவிப்பு பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்றும், மம்தாவின் சவாலை சந்திக்கத் தயார் என்றும், மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டாச்சார்ஜி கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது-
தனியாக போட்டியிடுவது என்று மம்தா முடிவு எடுத்தால், எங்களுக்கும் தனித்துப் போட்டியிடுவதற்கான தெம்பு-திரானி உள்ளது. அவருடைய கருத்து பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. மம்தாவின் சவாலை ஏற்றுக் கொள்கிறோம். இந்த நேரத்தில், மம்தா பானர்ஜி அப்படி ஏன் அறிவித்தார்? என்று தெரியவில்லை. அவருடைய இந்த அறிவிப்பு பச்சைத்துரோகம் ஆகும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்று, 34 ஆண்டு கால இடதுசாரிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டி இருக்க முடியாது. மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசில் நீடிப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். அதுவரை ஆட்சியில் நீடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில காங்கிரஸ் தலைமை மம்தா பானர்ஜிக்கு கடுமையான பதிலடி கொடுத்திருக்கும் நிலையில், மேற்கு வங்காள மாநில கட்சி பொறுப்பை கவனிக்கும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளரான ஷகீல் அகமது மழுப்பலான கருத்தை தெரிவித்து இருக்கிறார். நேற்று டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த அவர், கூட்டணியை பாதிக்கும் விதத்தில் மம்தாபானர்ஜி எதையும் சொல்லவில்லை. ஆட்சேபகரமாக அவர் எதையும் கூறவில்லை. சமீபத்தில் நடைபெற்ற சில உள்ளாட்சி தேர்தல்களில் கூட நாங்கள் தனித்து போட்டியிட்டு இருக்கிறோம் என்றார்.
ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும் மற்றொரு கேள்விக்குப் பதில் அளித்த ஷகீல் அகமது, கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையில், மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலை முன்கூட்டியே நடத்த மம்தா முடிவு செய்து இருப்பது ஜனநாயக விரோத செயல் என்று, மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
மாநில அரசுக்கு நிதி உதவி செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக மம்தா பானர்ஜி கூறுவதை ஏற்க முடியாது என்றும், எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment