இந்திய கிரிக்கெட் அணி வருகிற 21-ந் தேதி முதல் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர் இடம்பெறவில்லை. தெண்டுல்கர் கேட்டுக் கொண்டதன் பேரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிக்கு பின்னர் தெண்டுல்கர் இரண்டு ஒருநாள் போட்டி தொடரில் மட்டுமே விளையாடி உள்ளார். இதனால் அவர் டெஸ்ட் போட்டியில் மட்டும் கவனம் செலுத்த உள்ளதாகவும், ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.
இந்த நிலையில் தனது ஓய்வு குறித்து வெளியான கருத்துகளுக்கு 39 வயதான தெண்டுல்கர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனியார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஓய்வு விஷயத்தில் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பொருட்டல்ல. நான் என்ன நினைக்கிறேன் என்பது தான் முக்கியம். எவ்வளவு காலம் ஆட்டத்தை அனுபவித்து ஆட முடியும் என்று நான் நினைக்கிறேனோ? அது வரை விளையாடுவேன்.
ஒருநாள் போட்டிகளில் நான் தொடர்ந்து ஆடுவேன். 2007-ம் ஆண்டு 20 ஓவர் போட்டிக்கான அணியில் இடம் பெற தேவையில்லை என்று கருதி விலகினேன். என்னை அணியில் தொடருமாறு கேட்டுக் கொண்டனர். 20 ஓவர் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதால் அந்த அணியில் இடம் பெற வேண்டாம் என்று முடிவெடுத்து ஒதுங்கி கொண்டேன்.
ஒருநாள் போட்டியில் அதுபோன்ற உணர்வு எனக்கு எப்போது ஏற்படுகிறதோ? அப்போது 20 ஓவர் போட்டியில் எடுத்தது போன்ற முடிவை நான் எடுக்கலாம்.
நான் எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். இது குறித்து நான் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் வேண்டுகோள் விடுத்து இலங்கை பயணத்தில் இருந்து ஓய்வு முடிவுக்கு அனுமதி பெற்றேன். எனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டியதின் முக்கியத்துவம் கருதி இந்த முடிவை எடுத்தேன்.
2006-ம் ஆண்டில் இருந்து 6 ஆண்டுகளாக எனது ஓய்வு குறித்து கேள்வி எழுந்து வருகிறது. இப்போதும் அந்த கேள்வி எழுந்து இருக்கிறது. நான் கிரிக்கெட்டை ரசித்து மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன். கிரிக்கெட் ஆட்டம் மீதான எனது ஆர்வம் குறையாத வரையில் நான் தொடர்ந்து விளையாடுவேன்.
தனி நபர் ஆட்டத்தை பொறுத்தமட்டில் ஒரு நபர் சரியான நிலையில் இல்லை என்றால் கூட அணியை பாதிக்காது. ஆனால் அணி ஆட்டத்தை பொறுத்தமட்டில் அணியில் இடம் பெறும் போது உயர்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். அதிலும் குறிப்பாக நாட்டுக்காக விளையாடும் போது எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியமானதாகும்.
இந்த நேரத்தில் இந்த விஷயம் குறித்து இதற்கு மேல் நான் பேச விரும்பவில்லை. வரும் சீசனை நான் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் என்ன செய்வேன் என்பது குறித்து நான் இப்போது எதுவும் சிந்திக்கவில்லை. அந்த நேரம் வந்த பிறகு அது குறித்து நான் சிந்திக்க தொடங்குவேன். அதனை பற்றி நான் ஒருபோதும் நினைக்கவில்லை.
ஒவ்வொரு நபரும் வெவ்வேறு மாதிரியாக சிந்திப்பார்கள். 2006-ம் ஆண்டில் நான் ஆட்டத்தில் தொடர வேண்டுமா? அல்லது ஓய்வு பெற வேண்டுமா? என்பது குறித்து வெவ்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக சிந்திப்பார்கள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது நமக்கு தெரியாது. அதுபோல் நான் என்ன நினைக்கிறேன் என்பது பலருக்கு தெரியாது.கிரிக்கெட்டில் எனது வருங்காலம் குறித்து நான் எடுக்கும் முடிவில் யாரும் தலையிட முடியாது. இது குறித்து நான் தான் முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.
இலங்கை சுற்றுப்பயணத்தில் தெண்டுல்கர் விலகி இருப்பது குறித்து தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக்கிடம் கருத்து கேட்ட போது, தெண்டுல்கர் விளையாட வேண்டும் என்று தான் ஒட்டுமொத்த தேசமும் விரும்புகிறது. அவர் விளையாடாத போது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கும் அது வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் ஒன்றை எல்லோரும் உணர வேண்டும்.
39 வயதான தெண்டுல்கர் எந்த தொடரில் விளையாட வேண்டும் என்பதை தேர்வு செய்யும் உரிமையை அவருக்கு அளிக்க வேண்டும். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவார்.
டோனி மிகவும் வலுவான இந்திய அணியை பெற்று இருந்ததால் தான் 2007-ல் 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ல் ஒருநாள் போட்டி உலக கோப்பையையும் வெல்ல முடிந்தது.
வலுவான அணியை பெற்று இருக்கையில் சிறப்பாக விளையாடுவது எளிதான விஷயமாகும். ஒரு காலத்தில் ஆஸ்திரேலிய அணி வலுவாக இருந்ததால் உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது. நமது அணி வலுவாக இருந்ததால் உலக கோப்பையை வெல்ல முடிந்தது. அந்த வலுவான அணியின் பின்னணியில் கேப்டன் டோனியின் பலமும் சேர்ந்துள்ளது என்று கூறினார்.
No comments:
Post a Comment