சோனியா காந்திக்குப் பிரதமர் பதவி கிடைக்காமல் போனதற்கு என்ன காரணம் என்பது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்களுக்கு இதுவரை சரியான தகவல் இல்லை. அவரது குடியுரிமைதான் பிரச்சினை என்பது மட்டுமே அனைவருக்கும் தெரியும். ஆனால் அதில் என்ன சட்டச் சிக்கல் இருந்தது என்பதை சுப்பிரமணியம் சாமி விளக்கியுள்ளார்.
முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைப் பிடித்து, அடுத்த பிரதமர் சோனியாதான் என்று அனைவரும் பேசி வந்தனர். அந்த சமயத்தில்தான் சோனியா காந்தியின் குடியுரிமை, அவரது பிறப்பு குறித்து சர்ச்சைகள் வெடித்தன. குடியரசுத் தலைவராக அப்போது இருந்த அப்துல் கலாமுக்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் அடுத்தடுத்து புகார்களை அனுப்பிக் கொண்டிருந்தன. அனைவரும் சோனியா பிரதமராகக் கூடாது என்று கோரி வந்தனர்.
இந்த நிலையில்தான் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியாமி சாமியை அழைத்தார் கலாம். அவரிடம், சோனியாவை பிரதமராக்குவதில் அப்படி என்னதான் சட்டச் சிக்கல் உள்ளது என்று கேட்டுள்ளார். பல்வேறு சட்ட நிபுணர்களையும் உடன் வைத்துக் கொண்டு சாமியிடம் இந்த விளக்கத்தைக் கேட்டுள்ளார் கலாம்.
அப்போது சாமி விளக்கம் தருகையில், சோனியா காந்தியின் இந்தியக் குடியுரிமையே முதலில் தவறானது. அவர் பதிவு பெற்ற குடியுரிமையைத்தான் வைத்துள்ளார். அதுவும் கூட தற்போது செல்லாது. சட்டப்படி தற்போது அவர் இத்தாலி குடியுரிமையில்தான் உள்ளார். காரணம், இந்திய சட்டப்படி இந்தியர் ஒருவர், இந்தியாவில் மட்டுமே குடியுரிமை பெற்றிருக்க முடியு்ம். ஆனால் சோனியா தனது இத்தாலி நாட்டுக் குடியுரிமையை இந்த நிமிடம் வரை கைவிடாமல் வைத்திருக்கிறார். எனவே அவரது இந்தியக் குடியுரிமையே சட்டப்படி தவறாகும் என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற சட்ட சிக்கல்களை கலாம் புரிந்து கொண்டதால்தான் அவர் சோனியாவை பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கத் தயாராக இல்லை என்றும் சாமி கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக விரிவான முறையில் சட்ட ஆலோசனைகளை மேற்கொண்ட பின்னர்தான் கலாம் தீர்க்கமான, திட்டவட்டமான முடிவை எடுத்தார் என்றும் கூறியுள்ளார் சாமி.
கலாம் 2வது முறையாக குடியரசுத் தலைவராக முடியாமல் போனது குறித்து தான் வருந்தவில்லை என்றும், அதேசமயம், கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராயிருந்தால் மிகச் சிறந்த குடியரசுத் தலைவரை மீண்டும் நாடு பார்த்திருக்கும் என்றும் சாமி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment