குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனையின் போது பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப் போட்டியிடும் சங்மா தரப்பு ஒரு ஆட்சேபனையை முன்வைத்தது. ஆதாயம் தரக்கூடிய பதவியில் இருந்து கொண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாது... ஆனால் இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவராக பிரணாப் நீடித்து வருகிறார் என்பதால் அவரது மனுவை நிராகரிக்க சங்மா தரப்பு வலியுறுத்தியது. இதனால் வேட்புமனு பரிசீலனை ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டு பிரணாப் முகர்ஜியிடம் விளக்கம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜி வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாகவே அந்த சர்ச்சைக்குரிய பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்றும் அதற்கான ஆதாரம் ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்ததுபோல் போலியாக கடிதம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் பிரணாப் கையெழுத்து வேறு ஒருநபரால் போடப்பட்டிருப்பதாகவும் சங்மா தரப்பு மீண்டும் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தையும் சந்தித்து புகாரும் தெரிவித்தது.
இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் கையெழுத்து போலியானது என்பதை உறுதிப்படுத்தும் தடவியல்துறையின் அறிக்கை நேற்று தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் வேட்புமனுவில் உள்ள கையெழுத்தும் ராஜினாமா கடிதத்தில் உள்ள கையெழுத்தும் வெவ்வேறானவை என்பதை நிரூபிக்கும் ஆவணங்களையும் சங்மா தரப்பு தாக்கல் செய்தது. பி.ஏ.சங்மா சார்பில் பாஜக மூத்த தலைவர் சத்யபால் ஜெயின், பிஜு ஜனதாதளம் எம்.பி. பரத்ருஹரி மஹதாப், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் இந்த ஆதாரத்தை தாக்கல் செய்தனர். தங்களது ஆட்சேபனையை தேர்தல் ஆணையம் நிராகரிக்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தை நாடவும் சங்மா தரப்பு முடிவு செய்திருக்கிறது.

No comments:
Post a Comment