Tuesday, July 24, 2012

இமயமலை குகையில் ஒளியில் தெரிந்த பாபாஜி: சென்னை பக்தரின் காமிராவில் பதிவாகி இருந்த அதிசயம்

கி.பி. 203-ம் ஆண்டு நவம்பர் 30-ம் நாள் தமிழ்நாட்டில் பரங்கிப்பேட்டை என்ற ஊரில் ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு நாகராஜ் என்று அதனுடைய பெற்றோர் பெயரிட்டனர். 

நாகராஜ் என்ற பெயருக்கு நாகங்களின் அரசன் என்று பொருள். நாகம் என்பது குண்டலினி சக்தியை குறிப்பதாகும். அந்த குழந்தை ரோகிணி நட்சத்திரத்தில், வாதூல கோத்திரத்தில் பிறந்தது (கிருஷ்ண பரமாத்மாவின் நட்சத்திரமும் ரோகிணிதான் என்பது குறிப்பிடத்தக்கது) 

அந்த குழந்தை பிறந்த நாள் கார்த்திகை தீபத் திருநாளாகும். கார்த்திகை மாதம் பவுர்ணமிக்கு முந்தைய இரவு கார்த்திகை தீபத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. அது இருளை ஒளி வெல்லும் என்பதற்கான குறியீடு. 

குழந்தையின் பெற்றோர் நம்பூதிரி பிராமணக் குடும்பத்தினர் ஆவர். அவர்களின் வம்சம் கேரளாவின் மலபார் கடற்கரை பகுதியில் இருந்து பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே பரங்கிப்பேட்டைக்கு வந்து விட்டனர். 

இமயமலைச் சாரலில் பத்ரிநாத்தில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட கோவிலில் பூஜை செய்பவர்கள் இந்த வகுப்பினரே ஆவர். இங்குதான் நாகராஜ் என்கிற இளைஞர் பாபாஜி என்கிற சித்தராக மாறினார். இமயமலை அடிவாரத்தில் பத்ரிநாத்தில் உள்ள பாபாஜியின் ஆசிரமம் அமைந்துள்ள பகுதி நான்கு பக்கங்களிலும் செங்குத்தான பாறைகளால் சூழப்பட்டு இருக்கிறது. 

பாறைகளின் அடிவாரத்தில் வரிசையாக குகைகள் இருக்கின்றன. அவற்றில் பெரியது பாபாஜியினுடைய குகை ஆகும். இந்த குகைக்கு எதிரில் ஒரு மூலையில் 2 நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன. ஆன்மீக வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தி வரும் பாபாஜி என்றும் இளமையானவர் என்று குறிப்பிடப்படுகிறது. 

பாபாஜி இமயமலையில் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிற ஒரு மாபெரும் யோகி என்று நம்பப்படுகிறது. கிரியா பாபாஜி, பாபாஜி நாகராஜ், மகாவதார பாபாஜி, சிவபாபாஜி என்றெல்லாம் பாபாஜி அழைக்கப்படுகிறார். பாபாஜி மிக நீண்ட பயணத்துக்குப்பின் பத்ரிநாத்தை அடைந்தார். அங்கே தனிமையில் பதினெட்டு மாதங்கள் அகத்தியராலும், போகநாதராலும் பயிற்றுவிக்கப்பட்ட கிரியா யோக நுணுக்கங்களை எல்லாம் மிக தீவிரமாக பயிற்சி செய்தார். 

பதினெட்டு மாதங்கள் அயராமல் செய்த பயிற்சியின் விளைவாக இறுதியில் சொரூப சமாதி அடைந்தார். அவருக்குள் இறைமை இறங்கியது. அவருடைய ஆனந்தமய கோசம், விஞ்ஞானமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், அன்னமய கோசம் ஆகிய 5 உடல்களும் நிலை மாற்றம் பெற்றன. 

அவருடைய தூய உடல் முதுமை, பிணி ஆகியவற்றில் இருந்து விடுபட்டது. அதில் பொன்னிறமான தெய்வ ஒளி வீசத் தொடங்கியது என்று கூறப்படுகிறது. பாபாஜி குகையில் தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலரும் அங்கு சென்று வருகிறார்கள். 

பாபாஜியின் தீவிர பக்தரான நடிகர் ரஜினியும் பாபாஜி குகையில் தியானம் செய்து இருக்கிறார். மன அமைதி வேண்டியும், குண்டலினி சக்தி பெறவும், இமயமலையில் உள்ள பாபாஜி குகைக்கு பலர் சென்று வருகிறார்கள். 

சென்னை பூந்தமல்லி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அகஸ்தியர் ஜோதிடர் பி.எஸ்.பிரம்மன்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு இமயமலையில் உள்ள பாபாஜியின் குகைக்கு சென்று தியானம் செய்தார். அங்கு மனம் உருகி பாபாஜியை நினைத்து தியானத்தை முடித்துக் கொண்ட அவர் திரும்பிய போது தன்னிடம் இருந்த காமிரா மூலம் பாபாஜியின் தியான குகையை போட்டோ எடுத்தார். 

பின்னர் சென்னை திரும்பிய அவர் தான் எடுத்த போட்டோவை பிரிண்ட் போட கொடுத்தார். போட்டோவை பார்த்த அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம் பாபாஜியின் குகையில் எந்தவிதமான உருவப்படமும் இல்லை. 

ஆனால் இவர் எடுத்த போட்டோவில் ஒளி ரூபத்தில் பாபாஜி இருப்பதும், பொன் நிறத்தில் அவரது கால் பாதம் இருப்பதும், அவரது அருகில் 2 நாக பாம்புகள் இருப்பதையும் கண்டார். 

செய்வதறியாது திகைத்த அவர் இதுபற்றி கூறியதாவது:- 

கடந்த 3 ஆண்டுகளாக நான் இமயமலையில் உள்ள பாபாஜியின் குகைக்கு சென்று வருகிறேன். கடந்த 2009-ம் ஆண்டு பாபாஜி என் கனவில் வந்தார். அப்போது அவர் என்னிடம் சில ரகசியங்களை கூறினார். இதையடுத்து நான் இமயமலையில் உள்ள பாபாஜியின் குகைக்கு செல்வதை வாடிக்கையாக்கி கொண்டேன். 

அந்த குகையில் பாபாஜியின் எந்த உருவமும் இல்லை. நாங்கள் கொண்டு சென்ற பாபாஜியின் உருவ படத்தை நான் தியானம் செய்து விட்டு திரும்பியபோது குகையை போட்டோ எடுத்தேன். அதை பிரிண்ட் போட்டபோது அதில் பாபாஜி ஒளி வடிவில் காட்சியளித்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தேன். 

இந்த போட்டோவில் அவர் என்றும் இளைஞன் போல் இருந்தார். பல நூறு ஆண்டுகள் ஆகியும் உயிரோடு வாழ்ந்து வரும் பாபாஜி இன்னும் இளமையான தோற்றத்தில் இருப்பதையும், அவரது அருகில் 2 நாகப்பாம்புகள் இருப்பதையும் அந்த படத்தில் காணலாம் என்றார். 

இவரிடம் உள்ள இந்த அதிசய போட்டோவை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக இமயமலையில் வாழ்ந்து கொண்டும், பேறு பெற்ற சிலருக்கு மட்டும் காட்சியளித்துக் கொண்டு இருப்பதாக கூறப்படும் பாபாஜி தற்போது சென்னை பக்தரின் காமிராவில் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு மகா அவதாரமான பாபாஜி பல்வேறு உருவங்களை தாங்கியதாக சிலர் கூறுகின்றனர். 
No comments:

Post a Comment