குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பிக்களின் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துவிட்டது. மாநிலங்களில் எம்.எல்.ஏக்களின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தொடர்ந்தும் பிரணாப் முகர்ஜி முன்னிலையில் உள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பி.ஏ.சங்மாவும் போட்டியிடுகின்றனர். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்ற கட்டிடத்தில் அறை எண் 63-ல் இன்று எண்ணப்பட்டன. மொத்தம் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன.
எம்.பிக்கள் வாக்கு
முதலில் எம்.பிக்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. பிரணாப் முகர்ஜிக்கு 527 எம்.பிக்களின் வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது 72% எம்.பி.க்களின் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. பி.ஏ. சங்மாவுக்கு 206 எம்.பிக்களின் வாக்குகளே கிடைத்திருக்கின்றன. 15 எம்.பிக்களின் வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் எ.பிக்களின் 3,73,116 வாக்குகள் பிரணாப் முகர்ஜிக்கு கிடைத்திருக்கிறது. சங்மாவுக்கு எம்.பிக்களின் 1,45,848 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. பிரணாப் முகர்ஜிக்கு மொத்தம் 69 விழுக்காடு ஆதரவு கிடைத்திருக்கிறது. சங்மாவுக்கு 31 விழுக்காடு ஆதரவும் கிடைத்திருக்கிறது.
எம்.எல்.ஏக்கள் வாக்கு
இதையடுத்து மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்கள் போட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திர மாநிலத்தில் பிரணாப் முகர்ஜிக்கு 182 வாக்குகள் கிடைத்தன. அதாவது 36,936 வாக்குகள் கிடைத்தன. சங்மாவுக்கு வெறும் 3 வாக்குகள்தான் கிடைத்தன. தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தேர்தலைப் புறக்கணித்திருந்தன.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் மொத்தம் 126 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் பிரணாப் முகர்ஜிக்கு 110 வாக்குகள் கிடைத்தன. சங்மாவுக்கு 13 வாக்குகளே கிடைத்தது. 2 வாக்குகள் செல்லாதவை. ஒருவர் வாக்களிக்கவில்லை.
பீகார் மாநிலத்தில் பிரணாப் முகர்ஜிக்கு 146 வாக்குகளும், சங்மாவுக்கு 90 வாக்குகளும் கிடைத்தன. அருணாசலப்பிரதேசத்தில் பிரணாப்முகர்ஜிக்கு 54 வாக்குகளும் சங்மாவுக்கு 3 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 3 வாக்குகள் செல்லாதவை.
40 எம்.எல்.ஏக்கள் கொண்ட கோவா சட்டப்பேரவையில் 31 வாக்குகளை சங்மா பெற்றார். பிரணாப் முகர்ஜிக்கு வெறும் 9 வாக்குகள்தான் கிடைத்தன. சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் 50 எம்.எல்.ஏக்களின் வாக்குகளை சங்மா பெற்றார். 39 வாக்குகளே பிரணாப் முகர்ஜிக்கு கிடைத்தது. ஒருவாக்கு செல்லாதது.
இதேபோல் குஜராத் சட்டப்பேரவையில் 182 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் சங்மாவுக்கு 123 வாக்குகள் கிடைத்தன. பிரணாப் முகர்ஜிக்கு 59 வாக்குகள் மட்டும் கிடைத்திருக்கிறது. தொடர்ந்தும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
ஜார்க்கண்ட், ஜம்மு., காஷ்மீர், இமாச்சலப் பிரதேசங்களிலும் பிரணாப் முகர்ஜியே கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி பிரணாப்- 5,09, 030 வாக்குகளும் சங்மா 2,12,130 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
பிரணாப் முகர்ஜியின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் அதிகாரப்ப்பூர்வ அறிவிப்பு வெளியான உடன் பிரதமர் மன்மோகன்சிங், பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
No comments:
Post a Comment