தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு அலுவலகமும், சென்னை, மதுரையில் மாநில செயல் மற்றும் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. பட்டப் படிப்பு வரையிலான கல்வித்தகுதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், முதுகலை படிப்பு, பி.இ., பி.டெக்., எம்.பி.பி.எஸ்., பி.எல். போன்ற தொழிற்படிப்புகளுக்கான கல்வித்தகுதியை தங்கள் மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவுசெய்ய வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து வைத்துள்ள பதிவுதாரர்கள் தங்கள் பதிவுமூப்பை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் சீனியாரிட்டி காலாவதியாகி விடும். இதுபோன்று பதிவுமூப்பை புதுப்பிக்காமல் விடுபட்டுபோனவர்கள் பயன்பெறும் வகையில் அவ்வப்போது சலுகை அளிக்கப்படுவது உண்டு.
அந்த வகையில், கடந்த 2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் பதிவுமூப்பை புதுப்பிக்கத் தவறியவர்கள் அதை புதுப்பித்துக்கொள்ள அரசு சலுகை அளித்தது. அதன்படி, கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ந் தேதி வரை இந்த சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போது ஆன்லைனில் புதுப்பிக்கும் முறை அமலில் இருந்தாலும் இதுபோன்று சலுகையை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்துதான் பெற முடியும்.
ஆனால், இந்த முறை இத்தகைய விடுபட்டுபோன பதிவுமூப்பையும் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வராமல் ஆன்லைனிலேயே புதுப்பித்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்றும் புதுப்பிக்கலாம்.
சென்னையில் உள்ள மாவட்ட பொது வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகம், ஊனமுற்றோருக்கான வேலைவாய்ப்பு அலுவலகம், மாநில தொழில் மற்றும் செயல்முறை வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகிய அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் சேர்த்து இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுதாரர்கள் விடுபட்டு போன தங்கள் பதிவை புதுப்பித்திருப்பதாக வேலைவாய்ப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment