வருகை பதிவு குறைவு பிரச்சினையில் சிக்கிய இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி கேப்டன் உன்முக்த் சந்த் இரண்டாவது ஆண்டு படிப்பை தொடர டெல்லி பல்கலைக்கழகம் சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
சதம் அடித்து இந்திய அணியின் வெற்றியில் கேப்டன் உன்முக் சந்த் முக்கிய பங்கு வகித்தார். உன்முக் சந்த் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பி.ஏ. (பொருளாதாரம்) முதலாம் ஆண்டு படித்து வந்தார். அடிக்கடி பயிற்சி மற்றும் போட்டிகளுக்கு சென்றதால் உன்முக் சந்த் சரியாக கல்லூரிக்கு செல்லவில்லை.
மாணவர்கள் பல்கலைக்கழக தேர்வு எழுத வேண்டும் என்றால் குறைந்தபட்சம் (33.3 சதவீதம்) கல்லூரிக்கு வருகை புரிந்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு 8 சதவீதமே வருகை பதிவேடு உள்ளது. இதனால் கல்லூரி நிர்வாகம் உன்முக் சந்த் 2-வது செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி அளிக்கவில்லை.
டெல்லி பல்கலைக்கழக தேர்வு விதிப்படி ஒருவர் இரண்டு செமஸ்டரிலும் முழுமையாக தேர்ச்சி பெறாவிட்டால் ஒரு ஆண்டு படிப்பில் இருந்து அடுத்த ஆண்டு படிப்புக்கு முன்னேற முடியாது. ஒரு ஆண்டை இழக்க நேரிடும்.
இந்த நிலையில், உலக கோப்பை போட்டியால் பிரபலமான உன்முக் சந்துக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படாத பிரச்சினை தேசிய அளவில் விசுவரூபம் எடுத்தது. அவரை சிறப்பு அனுமதியுடன் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் அத்துடன் அவர் 2-வது ஆண்டு படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய விளையாட்டு மந்திரி அஜய்மக்கான் வலியுறுத்தியதுடன், டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதமும் எழுதி இருந்தார்.
இதற்கிடையில் இந்த விஷயத்தில் மத்திய மந்திரி கபில்சிபலும் தலையிட்டார். அவர் உன்முக்சந்த் விவகாரம் தொடர்பாக செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி முதல்வர் வல்சன் தம்பு மற்றும் டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் தினேஷ்சிங் ஆகியோருடன் டெலிபோனில் பேசினார்.
அப்போது தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி உன்முக் சந்துக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மத்திய மந்திரியின் கோரிக்கையை ஏற்று உன்முக் சந்துக்கு விசேஷ சலுகை அளிக்க டெல்லி பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் தினேஷ்சிங் கூறுகையில், நாட்டுக்கும், பல்கலைக்கழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ள உன்முக் சந்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். உன்முக் சந்த் இரண்டாவது ஆண்டு படிப்பை தொடர டெல்லி பல்கலைக்கழகம் சிறப்பு சலுகை அளித்துள்ளது என்றார்.
இதன் மூலம் கடந்த இரண்டு தினங்களாக சர்ச்சையை ஏற்படுத்திய உன்முக் சந்த் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. அவர் செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் தனது படிப்பை தொடருவார்.
No comments:
Post a Comment